பக்கம்:தமிழ் அங்காடி.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96  தமிழ் அங்காடி


தந்துள்ள வரத்தை யான் அறியாமையால் வாலியோடு போர் புரிந்து தோற்றுப் போனேன். இதனால் யான் மற்ற குரங்குகளை வெல்ல முடியாது என்று கூறுகின்றாயா (107)

சிவனும் திருமாலும் வாலியோடு போர் புரியினும் தோற்றுப்போவர் என்பதை யறிந்தே அந்த மானிட இராமன் மறைந்து நின்று அம்பு எய்தான். (108)

ஓட்டை மரங்கள்

இராமன், முதலிலேயே ஊனமான வில்லை ஒடித்து, ஒட்டையான மரா மரங்களைத் துளைத்துப் பெரிய பேர் பெற்றுவிட்டான், அவன் கூனிக்கிழவியின் சூழ்ச்சியால் அரசு துறந்து காட்டுக்கு ஓடி வந்தவன்; காட்டிலே என்னால் மனைவியை இழந்து இன்னும் உயிர் வைத்துக் கொண்டிருப்பவன். அத்தகைய எளியவனை உன்னைத் தவிர வேறு யார் மதிப்பார்கள்?

        "ஊனவில் இறுத்து ஒட்டை மாமரத்துள் அம்பு ஒட்டிக்
        கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து உயர் வனம் குறுகி
        யான் இழைத்திட இல் இழந்து இன்னுயிர் சுமக்கும்
        மானிடன்வலி நீ யலாது ஆருளர் மதித்தார்" (109)

இங்கே இராவணன் இராமனைக் கிண்டல் செய்கின்றான். இராமன் நாணேற்றியவில் ஊனமுள்ளது என்பது முன்பே கூறப்பட்டுள்ளது. இராமன் துளைத்த மராமரங்கள் ஒட்டை மரங்கள் எனப்பட்டுள்ளன. ஒட்டை என்பதற்கு இரு பொருள்கள் உண்டு. ஒட்டை மரம் = இளைய - முற்றாத - பிஞ்சு மரம் என்பது ஒருபொருள். பரிபாடல் நூலில் இது தொடர்பாக உள்ள பாடல் பகுதியும் அதன் பரிமேலழகர் உரையும் வருமாறு:

                "கோட்டியுள் கொம்பர் குவிமுலை நோக்குவோன்
                ஒட்டை மனவன் உரமிலி என்மரும்" (12:50,51)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/98&oldid=1203462" இலிருந்து மீள்விக்கப்பட்டது