பக்கம்:தமிழ் அமுதம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

"வைரத்தை வைரத்தால்தான் அறுக்கவேண்டும்” என்பதுபோல, மனித வாழ்வு செம்மைப்பட, மனித வரலாறுகளே மாணவர்க்குக் கற்பிக்கப்படல் வேண்டும். சான்றாக, ஆபிரகாம் லிங்கன் வரலாற்றை எடுத்துக் கொள்வோம். எளிய குடிசையில் எளிய பெற்றாேர்க்குப் பிறந்த ஆபிரகாம் லிங்கன் எவ்வாறு தமது சொந்த உழைப்பினால் படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தார் — அமெரிக்கக் குடியரசின் தலைவரானார்— அவரிடம் காணப் பட்ட உயர்குணங்கள் யாவை என்பனவற்றை அவரது வரலாறு நன்கு விளக்குகின்றது. இவ்வரலாற்றைப் படிக்கும் மாணவனது உள்ளம், உண்மையில் கிளர்ச்சி யடையும் அல்லவா? உழைத்தால் உயரலாம் — நாட்டை ஆளும் தலைவனாக வரலாம் — மக்களுக்கு நலங்கள் பல செய்யலாம் என்ற எண்ணங்கள் அவர் உள்ளத்தில் தோன்றி வளர, இவ் வரலாறு பெருந்துணை செய்கின்றதன்றாே !

இவ்வாறே நாகரிக முன்னேற்றத்திற்கு வழிகாட்டிகளாக உள்ள விஞ்ஞானிகளுடைய வரலாறுகளும், சமயத் தலைவர்களின் அறிவுரைகளும் மாணவர்களின் அறிவை யும் ஒழுக்கத்தையும் நன்முறையில் வளர்ப்பனவாகும். விவேகாநந்தர், இராமலிங்க அடிகள் போன்ற உண்மைச் சமயவாதிகளின் அறிவுரைகள் தெளிவாக மாணவர் படிக்கத்தக்க முறையில் நூல்களாக வெளியிடுதல் வேண்டும். சாதி சமய வேறுபாடற்ற நல்ல சமயம் உருவாக வேண்டுமானால், மனிதர் வரலாறுகளே மனிதனுக்குத் தேவை. மனிதனது வரலாறு மனிதனது வாழ்க்கையைச் செம்மைப் படுத்துவது போல, மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட தெய்வத் தொடர்பான வரலாறுகள் இளம் உள்ளங்களைச் செம்மைப்படுத்தும் ஆற்றல் பெற்றவை ஆகா என்று கூறுதல் தவறாகாது. மாணவப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/28&oldid=1459147" இலிருந்து மீள்விக்கப்பட்டது