பக்கம்:தமிழ் அமுதம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

இருந்த அளவைவிடக் குடும்பத்தைப் பற்றிய அளவு மிகுதியாக இருந்தது. அந்நிலையில் அவர்களிடம் காதல் இலக்கியமே மலர்ந்தது என்பதில் வியப்பில்லையல்லவா ? அதனால்தான் சங்கச் செய்யுட்களில் பெரும்பாலன அகப் பொருள் பற்றியே அமைந்துள்ளன.

அரசும் அரச உறுப்புக்களும் நிலைத்த பின்பே நாட்டைப் பாதுகாக்கவும் பிறநாடுகளைக் கைப்பற்றவும் போர்முறை தேவைப்பட்டது. அறிவிற் சிறந்த தமிழ் மக்கள் அதற்கும் பலவழிகளை வகுத்தனர்; வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை என்று போர் முறைகளை வகுத்தனர். ஒவ்வொரு போர் முறைக்கும் பலதுறைகளை (படிகளை) வகுத்தனர். அவற்றை நூல்களிலும் எழுதினர். இவைபற்றிய விவரங்களைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்திலும் புறப் பொருள் வெண்பா மாலையிலும் விரிவாகக் காணலாம். இத்துறைகளில் அமைந்த பாடல்களைப் புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் பத்துப் பாட்டிலும் காணலாம். எனவே, போரைப் பற்றிய பாடல்களும் தமிழரிடையே மலர்ச்சி பெற்றன.

தொடக்க காலத்தில் பழந்தமிழர் தனிப் பாக்களையே பாடிவந்தனர்; அறிவும் நாகரிகமும் வளரவளர, உலா முதலிய சிறு நூல்களைப் பாடினர்; பல புது நூல்களை எழுதத் தொடங்கினர் நாடக நூல்களையும் எழுதலாயினர். பின்பு பிற மொழி நூல்களை மொழிபெயர்க்கத் தொடங்கினர்; இவையெல்லாம் தொல்காப்பியர்க்கு முன்னும் (கி. மு. 300-க்கு முன்னும்) தொல்காப்பியர் காலத்திலும் இருந்தன என்பதைத் தொல்காப்பியம் கொண்டே உணரலாம். சங்ககால மொழிபெயர்ப்பு நூல்களுள் சிறந்தது மாபாரதம். இதனைக் கல்வெட்டால் அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/45&oldid=1459164" இலிருந்து மீள்விக்கப்பட்டது