பக்கம்:தமிழ் அமுதம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

மன்னரும் இங்ஙனமே வாழ்ந்தவர் — மானவுணர்ச்சியும் வீரவுணர்ச்சியும் மிக்கவர் — போரில் புறங்கொடாதவர் — தமிழர் நாட்டுப்பற்று மிக்கவர் — தவறு சுட்டியவழி அரசர் திருத்தப்பெற்றனர் — வீரத்தாய்மார் நாட்டு உரிமையைப் பெரிதும் நாடினர் — சமுதாயத்தில் ஆடவரும் பெண்டிரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினர் — ஒளவையார் போன்ற கற்றறிந்த பெண்மணிகள் அரசியல் தூதராகவும் இருந்தனர் — பெண்பாற் புலவர்கள் அரசரால் சிறப்பிக்கப் பெற்றனர் — தமிழர் உள்நாட்டு வாணிகத்திலுல் அயல் நாட்டு வாணிகத்திலும் சிறந்திருந்தனர் — அரசர் பண்பட்ட படைகளை வைத்திருந்தனர் — கைத்தொழிலும் பயிர்த்தொழிலும் சிறந்திருந்தன — தமிழ்மக்கள் உயர்ந்த குறிக்கோள்களுடன் வாழ்க்கை நடத்தி வந்தனர் — இயற்றமிழை வளர்க்கப் புலவரும், இசைத்தமிழை வளர்க்கப் பாணரும் பாடினியரும், நாடகத் தமிழை வளர்க்கக் கூத்தரும் விறலியரும் இருந்தனர் — தமிழ்க் குறுநிலமன்னரும் நெடுநில மன்னரும் இம்மூவகைப் புலவரையும் தம் உயிர் போலப் பாதுகாத்தனர் என்பன போன்ற செய்திகளை இத் தொகைப் பாக்கள் தெரிவிக்கின்றன.

திருக்குறள்

உலகம் போற்றும் திருக்குறளை மனிதவாழ்க்கை நூல் என்று சொல்லலாம். குழந்தை வளர்ச்சி — கல்வி — சமுதாயத்தில் பழகவேண்டும் முறை — யாரோடு பழக வேண்டுமென்பது — எவற்றைக் கொள்ள வேண்டும் எவற்றைத் தள்ளவேண்டும் என்பன — பயிர்த்தொழில் — அரசியல் — சமுதாய வாழ்க்கையில் நடந்து கொள்ளும் முறை — மனைவியின் சிறப்பும் கடமையும் — மனைவாழ்க்கை — இல்லறத்தார் கடமை — இறைவனைப் பற்றிய கருத்து — என்பன போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகள் யாவும் திருக்குறளில் இடம்பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/47&oldid=1459166" இலிருந்து மீள்விக்கப்பட்டது