பக்கம்:தமிழ் அமுதம்.pdf/7

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கன்னட நாட்டில் இராட்டிரகூடர் வன்மை மிக்க அரசர்களாக இருந்தார்கள். அவர்கள் கீழைச் சாளுக்கியரை ஒடுக்க முற்பட்டார்கள். கீழைச் சாளுக்கியர் கோதாவிரி, கிருஷ்ணையாறுகட்கு இடைப்பட்ட நாட்டை ஆண்டனர். பராந்தகன் ஆட்சியின் முற்பகுதியில் நான்காம் கோவிந்தன் இராட்டிரகூட அரசனாக இருந்தான். அரசியல் அறிவிற் சிறந்த பராந்தகன் அக்கோவிந்தனுக்குத் தன் மகளை மணம் செய்வித்து உறவுகொண்டான்.1 ஆயின், அடுத்து வந்த இராட்டிரகூட அரசனான மூன்றாம் கிருஷ்ணன் என்ற கன்னரதேவன், பராந்தகன் ஆட்சியின் பிற்பகுதியில் சோழப் பெருநாட்டைத் தாக்கினான்; ‘கச்சியும் தஞ்சையுங் கொண்ட கன்னரதேவன்' என்ற விருதுப் பெயரையும் பெற்றான்.

சோழர்-சாளுக்கியர் உறவு

மூன்றாம் கிருஷ்ணன் சோழரைத் தாக்கியது போலக் கீழைச் சாளுக்கியரையும் தாக்கி முறியடித்தான். அதனால் இரட்டரை ஒடுக்கச் சோழரும் கீழைச் சாளுக்கியரும் உறவு கொள்ளலாயினர். கி. பி. 934 முதல் 945 வரை சாளுக்கிய அரசனாக இருந்த இரண்டாம் சாளுக்கிய வீமன் மனைவியர் இருவரை மணந்துகொண்டான். முதல் மனைவியான உற்சபை என்பவளுக்குத் தானார்ணவன் என்ற மைந்தன் பிறந்தான். இரண்டாம் மனைவியாகிய லோகாம்பாள் என்பவட்கு இரண்டாம் அம்ம’ என்னும் மகனும் குந்தவ்வை என்னும் பெண்ணும் பிறந்தனர்.2 சாளுக்கிய வீமன் குந்தவ்வை என்ற தன் மகளைப் பராந்தகன் மகனான அரிஞ்சயனுக்கு மணம் செய்வித்தான்.


1 டாக்டர் வேங்கடரமணய்யா, வேங்கிச் சாளுக்கியர், பக்கம் 177.

2 ௸, பக்கம். 179 - 180

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/7&oldid=1459112" இலிருந்து மீள்விக்கப்பட்டது