பக்கம்:தமிழ் இனம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. ஐவருக்கு மனைவி


பாரதச் செய்தி

பாண்டவருள் நடுவனான அருச்சுனன் அம்பு எய்து வென்ற பாஞ்சாலியை, ஐவரும் மணந்து கொள்ள வேண்டுமென்று தருமன் கூற, துருபதன் கேட்டுக் கலக்கமுற்றான். அவ்வமயம் வியாச முனிவன் அங்குத் தோன்றிப் பாஞ்சாலி யின் முற்பிறப்பு வரலாற்றைக் கீழ்வருமாறு கூறினான்:

“இப்பாஞ்சாலி ஒரு பிறப்பில் நாளாயணி என்ற பெயருடன் மௌத்கல்ய முனிவனை மணந்தாள். அம்முனிவன் இவளுடைய கற்பையும் கணவன் மாட்டு இருந்த அன்பையும் சோதிக்க விரும்பிக் குட்ட நோயாளனாக உரு மாறினான். நாளாயணி அந்நிலையிலும் அவனிடம் அளவற்ற அன்புடன் நடந்துகொண்டாள். அதுகண்டு மகிழ்ந்த முனிவன், தன் மெய்யுருவைக் காட்டி உண்மையை விளக்கினான். ‘நீ விரும்பும் வரத்தைக் கேள்’ என்று முனிவன் கூறினான். நாளாயணி, ‘உன் அன்பு என்றும் நீங்காதிருத்தல் வேண்டும்’ என்று வேண்டினள். அவனும் அவ்வாறே வரங் கொடுத்தான். பின்பு கணவனும் மனைவியும் குன்றாகவும் ஆறாகவும், மரமாகவும் கொடியாகவும் வடிவு கொண்டு இன்புற்றும், இவ்வாறு பற்பல உருவங்கள் எடுத்து இன்புற்றும் மறைந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/101&oldid=1356887" இலிருந்து மீள்விக்கப்பட்டது