பக்கம்:தமிழ் இனம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐவருக்கு மனைவி

105

“அடுத்த பிறவியில் நாளாயணி இந்திரசேனை என்னும் பெயருடன் பிறவி எடுத்தாள்; மௌத்கல்யனும் புதிய பிறவி எடுத்தான். ஆயினும் அவன் இல்லற வாழ்க்கைக்கு அஞ்சித் துறவறம் சேர்ந்தான். இந்திரசேனை தன்னை மணந்து கொள்ளுமாறு அத்துறவியை வேண்ட, அவன் சினந்து, ‘நீ என் தவத்திற்கு இடையூறு புரிவத னால் துருபதன் மகளாய்ப் பிறக்கக் கடவை; உன்னை ஐவர் மணப்பர், என்று சபித்தான். அவள் செய்வகை அறியாது சிவனை நோக்கித் தவம் புரிந்தாள். சிவன் அவள் முன் தோன்றினான். இந்திரசேனை, ‘எனக்கு ஏற்ற கணவனைத் தருக’ என்று ஐந்து முறை அடுக்கிச் சொன்னாள். சிவன் ‘அப்படியே ஆகுக’ என்று வரம் கொடுத்தான். அது கேட்ட இந்திரசேனை மகிழாமல், ஒரு நாயகனைத் தரும்படி வேண்ட, சிவன், ‘நீ ஐந்து முறை வேண்டியபடி நான் உனக்கு ஐந்து தரம் அருளியது தவறாது. இவ்வரத்தின் பயனை நீ மறு பிறப்பில் நுகர்வாயாக; இக்கங்கையில் மூழ்கி வா; உன் எதிரில் தோன்றும் ஆடவனை என்னிடம் அழைத்து வா,’ என்றான்.

“அப்பொழுதே ஒரு கணவனைப் பெறாமல், மறு பிறப்பில் கணவர் ஐவரைப் பெறவேண்டுமே என்ற கவலையுடன் இந்திரசேனை கங்கையில் முழுகி எழுந்தாள். அவளது கண்ணீர் கங்கையில் விழுந்து பொற்றாமரை மலராகக் காட்சியளித்தது. அப்பொழுது அங்கு வந்த தேவேந்திரன் அதனைக் கண்டு வியந்தான். அவனைக் கண்ட இந்திரசேனை அவனைத் தன்னுடன் வரும்படி அழைத்துச் சென்று, சிவபெருமான் திருமுன்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/102&oldid=1356895" இலிருந்து மீள்விக்கப்பட்டது