பக்கம்:தமிழ் இனம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐவருக்கு மனைவி 109

ஒழுங்காக அமர்வார்கள். அப்பொழுது அவர்களுக்கு இனிப்புப் பொருள் கொடுக்கப்படும். அங்ஙனம் கொடுத்தல், அவள் அச்சகோதரர்க்குப் பொதுமனைவி என்பதைக் குறிப்பதாகும். அவ்வமயம் அக்கிராமத் தலைவன், அவள் அச்சகோதரர் அனைவர்க்கும் மனைவியாகிவிட்டாள் என்று அவையில் கூறுவான், பின்பு விருந்தினர் தத்தம் இல்லம் செல்வர். கணவருள் மூத்தவனும் மணமகளும் மணமகள் இல்லம் சென்று சிலநாட்கள் தங்கி மகிழ்வர். இவ்வாறே ஒவ்வொரு சகோதரரும் அப்பெண்ணுடன் அவள் வீடு சென்று சிலநாட்கள் தங்குவர். கணியர்’ சோதிடர் ஆதலின், எல்லாச்சகோதரரும் எப்பொழுதுமே வீட்டில் தங்கியிருத்தல் இயலாது ; ஒவ் வொருவரும் பல ஊர்களுக்குச் சென்று மீள்வர். எனவே, பெரும்பாலும் வீட்டில் ஒரு சகோதரனே இருத்தல் வழக்கம். ஒருவனுக்கு மேற்பட்டவர் ஒரே சமயத்தில் இருப்பராயின், ஒவ்வொருவரும் இத்துணை நாட்கள் அவளோடு வாழவேண்டும் என்பதை அவர்களுடைய தாய் முடிவு செய்வாள்

அம்முடிவுப்படி பிள்ளைகள் நடந்து கொள்வார்கள்.”

(4) மலையாள நாட்டில் ‘ கம்மாளர் பூணூல் அணிவதில்லை. அவர்க்குள்ளும் ஒருத்தி பலரை மணக்கும் வழக்கம் இருந்து வருகிறது. மணமகன் வீட்டார் பெண்வீட்டாரிடம் இரண்டுமுறை சென்ற பின் மணம்பற்றிய செய்தி முடிவுபெறும். உடனே, கணியன் வரவழைக்கப்படுவான். பெண்ணுக்கும் அவளை மணக்க இருக்கும் சகோதரருள் ஒருவனுக் கும் சாதகப் பொருத்தம் இருந்தால் போதும்

5 Ibid, Voł, III, р , 190,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/106&oldid=1359763" இலிருந்து மீள்விக்கப்பட்டது