பக்கம்:தமிழ் இனம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணியின் காதல்

121

என்ற இளைஞன்மீது காதல் கொண்டாள். நடராசன் சிறந்த அழகன்; நற்குணங்களுக்கு உறைவிடமானவன்; எதனையும் எண்ணிப் பார்த்துச் செய்யும் ஆற்றலுடையான்; பொறுமையில் மிக்கவன். இவனும் வாணியும் அடிக்கடி தனியே சந்தித்துப் பேசுதல் வழக்கம். ஒருவர் உள்ளத்தில் மற்றவர் குடிகொண்டு விட்டனர்.

தந்தையின் இடையீடு

சகடன் பணம் படைத்தவன் ; பொய்யான கெளரவத்தை விரும்பியவன்; அதனால் குடிலன் மகளான பலதேவனுக்குத் தன் மகளை மணம்முடிக்க விரும்பினான்; இதனைத் தன் மகளிடமும் தெரிவித்தான். எதிர்பாராத தந்தையின் முடிவைக்கேட்ட வாணி, இடியோசை கேட்ட நாகம் போல நடுங்கினாள். அவள் அஞ்சா நெஞ்சினள் ஆதலால் தன் தந்தையை நோக்கி, “ அப்பா, என் உள்ளங் கவர்ந்தவர் நடராஜன். ஆதலால், இனி ஒருவரையும் என் சிந்தையாலும் தொடேன். இது உறுதி, ” என்று ஆத்திரத்துடன் அறைந்தாள்.

அரசன் இடையீடு

தந்தையான சகடன் அரசனைக் கொண்டு தன் மகளுக்கு அறிவுரைகூறத் துணிந்தான். அரசனான சீவகன், எடுப்பார் கைப்பிள்ளை; ஆழ்ந்த அறிவு இல்லாதவன்; எதனையும் எண்ணிச் செய்யும் ஆற்றல் அற்றவன். ஆதலால், அவன் சகடன் பேச்சைக் கேட்டு வாணியைச் சந்தித்தான். இவ்விருவருக்கும் நடைபெறும் உரையாடலே இக்கட்டுரையின் உயிர்நாடிப் பகுதியாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/118&oldid=1361840" இலிருந்து மீள்விக்கப்பட்டது