பக்கம்:தமிழ் இனம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. குறிஞ்சிக்கலி


குறிஞ்சிக்கலி, கலித்தொகை என்னும் நூலுள் குறிஞ்சி ஒழுக்கத்தைக் கூறுவது. இது கலியின் வகையாகிய கலிவெண்பா, ஒத்தாழிசைக்கலி, கொச்சகக்கலி முதலியவற்றால் ஆகிய 29 செய்யுட்களை உடையது. இச்செய்யுட்கள் பல பொருள் பற்றியன ; பல துறைப்பட்டன. இவற்றுள் சில நாடக வழக்காகக் கொள்ளத்தக்கவை ; சில உரையாடற்கு ஏற்றவை; சில உள்ள நிகழ்ச்சிகளை ஓவியமாக வெளியிடுந் தன்மைய. இவை நாடக வழக்கிற்கே பெரிதும் உரிமையுடையவை எனல் பொருந்தும்.[1] பல செய்யுட்களின் நடை பழம் பாடல்களைவிட எளிமையும் இன்னோசையும் உடையது. ஒரு முறைக்கு இருமுறை மூலத்தை நன்கு வாசிப்பின், பொருள் நன்கு விளங்கும். எனினும் இதற்குள்ள நச்சினார்க்கினியர் உரை பெரிதும் போற்றத்தக்கதே. ஒரு சில இடங்களில் பொருள் அமைதி கெட்டிருப்பினும்,[2] பெரும்பகுதி நுட்ப அறிவோடு கூடியதே, ஏனைய தொகை நூல்களுள் குறிஞ்சித் திணையில் இடம்பெறாத கைக்கிளையும் பெருந்திணையும் இக் குறிஞ்சிக் கலியில் இடம் பெற்றிருத்தல் கவனித்தற்குரியது.

களவுக் கூட்டம் ஏற்படும் முறையிலும் ஏனைய நூற் செய்திகட்கும் இந்நூற்செய்திகட்கும் ஓரளவு


  1. தொல்-அகத்-53
  2. V. V. Reddiar's 'Kapilar,' pp-156-158.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/82&oldid=1359242" இலிருந்து மீள்விக்கப்பட்டது