பக்கம்:தமிழ் இனம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குறிஞ்சிக்கலி

91

தலைவி:-. என் உடலைச் சேராது துறந்தவனது மலை நீலமணி போலத் தோன்றுகிறதே, என்ன வியப்பு!

தோழி:- தலைவன் நம்மைத் துறப்பவன் அல்லன். அவன் உறவில் கொடியவை தோன்றல் என்பது, ஞாயிற்றுள் இருள் தோன்றியது போலாம்.

[இவர்கள் இங்ஙனம் பாடிக் கொண்டே நெற்குற்றுதலைத் தலைவன் சிறைப்புறமாக இருந்து கவனிக்கிறான்; 'நாம் இவளை மணக்கத் தாழ்த்தலால் வருந்தியன்றாே தலைவி நம்மை இயற்பழிக்கிறாள்; ஆதலின், உடனே விரைந்து மணமுடித்தல் நலம்,' என முடிவு செய்கிறான்; மணம் பேச வரும் அவனைத் தலைவியின் தந்தை ஏற்று, வேங்கை மரத்தடியில் அமர்ந்து மணம் பேசி முடிக்கிறான்.]

இப்பகுதி உரையாடற்கே அன்றி, நாடகக் காட்சிக்கும் சிறந்த காட்டாகுமன்றாே?

4. சுவை பயக்கும் செய்திகள்

கானவன் விட்ட கவண்கல்

இரவில் யானையின் காலடி ஓசையைக் கேட்ட தினைப்புனக் கானவன், ஓசை வந்த திசை நோக்கிக் கவண் கல்லை வீசி விட்டனன். அக்கல் வேங்கைப் பூக்களைச் சிதறச் செய்தது; கனிந்த ஆசினிப் பலாப்பழங்களை உதிர்த்தது; தேன் அடையைத் துளைத்தது; மாங்கொத்துக்களை உழக்கியது; வாழை மடலைக் கிழித்தது; இறுதியில் பலாப்பழத்துள் தங்கிவிட்டது. (செ. 5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/88&oldid=1394134" இலிருந்து மீள்விக்கப்பட்டது