பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

தமிழ் இலக்கியக் கதைகள்

"போற்றினாலும் போற்றுவார்கள்! கேட்ட பொருளைக் கொடுக்கா விட்டால் அதே போற்றுதலை நீக்கி வேறுவிதமாகத் தூற்றுவார்கள். முதலிற் கூறிய சொற்களை மாற்றிப் பொருளைத் திரித்துக் கூறவும் தயங்கமாட்டார்கள். பார்க்கப் போனால் எமனைவிடக் கொடியவர்கள் இந்தக் கவிஞர்கள்தாம்! இவர்களுடைய சாகஸம் எமனது சாகஸ்த்தை விட மிகவும் பெரியதாக அல்லவா இருக்கிறது.” என்று ஆத்திரத்தில் தான் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் கம்பரைப் பார்த்துப் பேசிவிட்டான் சோழமன்னன். அவன் பேசிய அந்தப் பேச்சு அங்கிருந்த பாவலர்களின் சமூகத்தையே தாழ்த்தும் கருத்துடையது தான். ஆனால் சோழன் அதைக் கம்பருக்காகவே சொல்லுகிறான் என்றெண்ணி அவர்கள் யாவரும் பேசாமல் இருந்து விட்டார்கள். அரசனுடைய ஆதரவினால் கம்பர் பாட்டிற்கு அதை இயற்றிய அவரே எண்ணியும் பார்த்திராத விபரீதப் பொருளைக் கற்பித்து'அவர் வாயை அடக்கிவிட்டோம்’ என்ற மமதையில் அழுந்திப் போயிருந்த அவர்கள் சோழனின் அந்தக் கருத்து, தங்கள் வர்க்கத்தையே ஆழத் தாழ்த்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.ஆனால் கம்பர் புரிந்து கொண்டார். அவருடைய உணர்ச்சி பொங்கியது. உள்ளம் சீறியது. அவர் கண்கள் சிவக்க, மீசை துடிக்கச் சினத்தோடு ஆசனத்திலிருந்து எழுந்து அவைக்கு நடுவே நின்றார். சோழனை நோக்கிப் பேசலானர்.

“சோழர் பேரரசே அளவற்றுப் பரந்து கிடக்கும் இந்த அகண்ட உலகத்திலே அரசன் என்ற பதவிக்குரியவன் நீ ஒருவன் மட்டும் தானா?.அப்படி இல்லையே? பொன்னி நதி பாயும் வளத்திற்குரிய நாடுபோல உலகில் வேறெங்கும் இல்லையா, என்ன? எண்ணற்ற பல நாடுகள் இதைப்போல உலகில் உள்ளன. அந்தத் தமிழ்ப் பாடல் உனக்காகவும் உன் விபரீதப் பொருளுக்காவும் தானா பாடினேன்? தமிழையறிந்து பாராட்டுபவர்களின் உலகம் உன் ஒருவனோடு அடங்கி விடவில்லை. அது பரந்து விரிந்து பரவிக் கிடக்கிறது! என் பாடலையும் என்னையும் ஆதரித்துப் பாராட்ட உலகெங்கும் வேந்தர்கள் உள்ளனர். நீ