பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

தமிழ் இலக்கியக் கதைகள்

குபேரனாக்கினான். தானே ஈசானன் போல் விளங்கினான். இப்பொழுது திசைப் பாலகர் எண் மரும் நிறைந்ததாகி விட்டது என் பெருமை. அஷ்டத்திக்குப் பாலகர்களும் ஒவ்வொரு வகையில் எனக்கு உதவ வேண்டுமென்றால் உலகிலேயே பிறருக்கு இல்லாத நிகரற்ற பெருமை அல்லவா அது எனக்கு” என்ற கருத்துக்களைப் பொருள் பொதிய வெளிப்படையாக அந்தப் பாட்டிலமைத்துத் திப்பைய ராயனிடம் பாடினார் சொக்கநாதப் புலவர்.

மலருக்கு அடியில் முள் இருப்பது போல இந்த வெளிப்படையான கவிதை மலருக்குள் பொதிந்திருக்கும் புலவரின் வறுமை முட்கள் (அவர் ‘என் பெருமை’ என்று வேடிக்கையாகச் சொன்ன அந்த வறுமை முட்கள்) திப்பைய ராயனுக்கு நன்றாகத் தெரிந்தன. வறுமையை எடுத்துக் கூறுவதில் கூடக் கவிதையும் அழகும் சாமர்த்தியமும் குறும்புத் தனமும் நிறைந்திருப்பது கண்டு வியந்தான் அவன். “என் ஆடை கிழிந்தது. பசிக்கு அடிக்கடி இலக்காகின்றவன், சாகமாட்டாமல் கண்ணிர் விட்டுக்கொண்டே வாழ்வைக் கழிக்கிறேன். காற்றை அமுதாக உண்டு காலத்தைக் கடத்தும்படி தாழ்ந்துள்ளது வறுமை நிறைந்த என் குடும்பம். வந்த இடத்திலோ திப்பைய ராயன் என்னுடன் பேசிப் பேசி நாளைக் கழிக்கின்றானே ஒழிய, என் மனைவி மக்களின் வறுமை நிலையை எண்ணி நான் படும் வேதனையை அறிந்து நிரம்பிய பொருளோடு விரைவில் என்னை ஊருக்கு அனுப்புகின்றான் இல்லை” என்று தன்னிடம் நேரில் சொல்ல வேண்டிய துயரங்களை மேற்கண்ட பாட்டாக அவர் பாடியதை உணர்ந்து கொண்ட திப்பைய ராயன் அவர் பாடியபடி வாக்கினால் மட்டுமின்றிச் செல்வத்தினாலேயே அவரைக் குபேரனாக்கி மரியாதையுடன் அனுப்பி வைத்தான்.

பல வகையாலும் தாமும் தம் மனைவி மக்களும் துன்புறு வதை வேதனைக் கதையாகக் கண்ணீருக்கிடையே கூறவேண்டிய புலவர், அதை நயமாக, “எனக்கு இவற்றில் எவருமே நிகரில்லை” என்று உரைப்பது விசித்திரமான ஒரு மனோபாவம்.