பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

123

தம்மை அன்போடு வரவேற்று உபசரித்த திருவேங்கடநாதப் பிரபுவிடம் இராமச்சந்திர கவிராயரும் இதே சாமர்த்திய வார்த்தையைத்தான் கூறுவதற்கு விரும்பினார். அதையும் அந்த வள்ளலின் பெயரிலேயே அமைத்துக் கூறுவதற்கு விரும்பினார். நன்றாக யோசித்து சாமர்த்தியப் பேச்சிற்கு வேண்டியவற்றைத் தமக்குள் சிந்தனை செய்து வைத்துக் கொண்டார். வழக்கப்படி செய்ய வேண்டிய உபசாரங்களை எல்லாம் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் செய்து முடித்தபின், புலவர் வந்த குறிப்பை அறிவதற்கு முற்பட்டார் திருவேங்கடநாதர்.

“எது இல்லாத குறையை நீக்கிக் கொள்ளும் பொருட்டுப் புலவர் தம்மிடத்திலே வந்திருக்க வேண்டும்? அவருடைய இதயம் இப்போது எந்த நிலையில், எவ்வெண்ணத்தோடு இருக்கக்கூடும்? பாவம் வேறு வருவாய் வசதிகள் குறைந்த இந்த ஏழைத் தமிழ்ப் புலவர் இப்போது எப்படிக் காலத்தைக் கடத்திக்கொண்டு வருகிறாரோ? பார்த்தால் இரசமற்ற வாழ்க்கையில் துன்புறுபவர் போலத் தோன்றுகின்றதே! இவருக்கு எதில், எதனால் சுவையற்றுப் போயிருக்க வேண்டும்? இவர் இப்போது நம்மிடம் என்ன சொல்லக் கருதியிருக்கிறார்? இம்மாதிரி எண்ணங்கள் தூண்டிட குறிப்பாகப் புலவர் மனம் புண்பட்டு விடாதபடி, நளினமான வார்த்தைகளால் அவரை விசாரித்தார் திருவேங்கட நாதர். திரும்பத் திரும்ப விசாரித்ததற்குப் புலவர் கூறிய பதில் வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் அமைந்திருந்தது. மேலே கண்ட வினாக்களைச் சூசகமாக முதலியார் ஒவ்வொரு தடவையும் கேட்டு முடிக்கவும் புலவர் வேறொன்றும் பதில் கூறாமல் ‘திருவேங்கடநாதா என்று மட்டும் துயரம் நிறைந்த குரலில் சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டார். மீண்டும் மீண்டும் முதலியார் கேட்ட போதும் புலவர், திருவேங்கடநாதர் என்ற அந்த ஒரே வார்த்தையைத் தவிர வேறெதுவுமே சொல்லவில்லை. ‘புலவர் தம்மிடம் விளையாடுகின்றாரா? அல்லது அவருக்கு ஏதாவது சித்தப் பிரமையா?’ என்று முதலியார் சந்தேகப்பட்டார்.