பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

தமிழ் இலக்கியக் கதைகள்

கோடையை மறக்கச் செய்துவிட்டன. தாம்பூலம் தரிக்குமாறு புலவரை வேண்டிக் கொண்டே தாமும் தரிக்கலானார் முதலியார். அதன் பின்பு அங்கேயே பந்தலில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். நேரம் ஆக ஆகப் புலவர் பேசும் போதே தம் கவனத்தை எங்கேயோ இலயிக்கவிட்டு விட்டுத் துயரப் பெருமூச்சு விடுவதை முதலியார் கண்டு கொண்டார். இவர் என்ன அவசர உதவியை வேண்டி வந்தாரோ? நாம் பேசிக்கொண்டே இருக்கிறோமே என்று ஒருவாறு புலவருடைய மனக்குறிப்பை முதலியாரால் யூகிக்க முடிந்தது.

இதைக் கண்ட உடனே முதலியார் விநயபாவத்துடனே புலவருக்கு எந்த உதவி வேண்டுமோ அதைக் தாம் உடனே செய்யக் காத்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்துக் கொண்டார். அவர் அப்படிக் கூறிய பின்னரும் புலவர் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நாணமுற்றுத் தலைகுனிந்தவாறு இருந்தாரே ஒழிய வாய்விட்டுத் தாம் வந்த காரியத்தையோ, தமக்கு வேண்டிய அவசர உதவியையோ கேட்கிற படியாகக் காணோம். ஆனால் அவருடைய வலது கைக் கட்டைவிரல் மட்டும் விரித்திருந்த பட்டுக் கம்பளத்தையும் கடந்து புதுமணலில் ஏதேதோ கீறிக் கொண்டிருந்தது, வாய்விட்டுச் சொல்ல அவர் வெட்கப்படுவது முதலியாருக்கும் புலப்பட்டது.

‘இவருடைய முகச் சாயையில் தெரியும் துயர ரேகையைப் பார்த்தால் ஏதோ உடனடியான உதவி வேண்டி வந்தவராகத் தெரிகிறது! அதைச் சொல்லவும் நாணப்பட்டால் நாமென்ன செய்ய முடியும்?’ இப்படி எண்ணிக் கொண்டிருந்த முதலியாரின் பார்வை தற்செயலாகப் புலவரின் வலது கைப் பக்கத்திலிருந்து கவரப்பட்டது. அங்கே எதோ எழுத்துக்கள் கீறப்பட்டிருப்பது அந்தத் தும்பைப் பூப்போன்ற வெண்மணலின் மேல் முதலியாருக்கு நன்றாகத் தெரிந்தது. கண்களில் வியப்பின் ஒளி நிழலிட முதலியார் மணலிற் கீறப்பட்டிருந்த எழுத்துக்களைக் கூட்டி வாசிக்கத் தொடங்கினார். ஆம் புலவர் தமக்கு வேண்டிய உதவியை வாய் திறந்து கேட்கமாட்டாமல் சுருக்கமாக மணலில் எழுதியிருந்தார். மணலில் தாம் கூறியிருந்தவற்றை முதலியார்