பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

தமிழ் இலக்கியக் கதைகள்

செய்தது. கல்விமானான புலவர் விரைவிலேயே எல்லாம் புரிந்து கொண்டார். விரும்பியழைத்த பரராசன் தம்மைப் பார்த்தால் அமங்கலமென்று திரையிட்டுப் பேசும் அவமானம் அவர் நெஞ்சில் முள்போல குத்தியது. அந்த வேதனை உடனே ஒரு பாட்டாய் வெளி வந்தது.

நரைக்கோட்டி ளங்கன்று
நல்வளநாடு நயந்தளிப்பன்
விரையூட்டு தார்புயன் வெற்பீழ
மன்னனென்றே விரும்பிக்
கரையோட்ட மீதில் மரக்கலம்
போட்டுன்னைக் காணவந்தால்
திரைபோட்டு நீயிருந்தாய்
சிங்கபூப சிரோமணியே.”

நயந்து = விரும்பி, விரை = மணம், தார் = மாலை, வெற்பீழம் = மலைகளையுடைய ஈழம், சிங்கபூபன் = பரராசசிங்கன்.

வீரராகவர் பாட்டை முடித்துக் கால்நொடிகூடக் கழிந்திருக்காது. பரராசன் தன் கையாலேயே அந்தத் திரையை விலக்கி எறிந்து விட்டு அவரிடம் ஓடோடி வந்து மன்னிப்புப் பெற்றுக் கொண்டான்.

48. சொல்லில் ஒரு சித்திரம்

சொற்களைத் தொடுத்து வெளியிடும் பக்குவங்களில் மிக உயர்ந்த பக்குவம் கவிதை. சொல்லிச் சொல்லிப் பல முறை அநுபவிக்க ஏற்ற ஒலி,பொருள் நயம், மந்திரம் போன்ற சொற்கள், உணர்வை ஊடுருவிச் செல்லும் உட்கருத்து, இவை ஒன்றுபடுமிடத்தில் கவிதை எழில் வடிவாய்ப் பிறந்து வருகிறது. தான் சென்று கலக்குமிடத்திலும் எழில் பெருக்குகிறது.