பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

145

அளவாகப் பேசித் தமது பதவியின் பெருமையையும் பணத்தின் பெருமையையும் நினைவு வைத்துக் கொண்டே பழகினார். தத்துவப் பிரகாசருக்கு அது வேதனை தந்தது.

சமயம் வரட்டும்! சரியானபடி சொல்லிக் காட்டி விடுகிறேன் என்று மனத்துக்குள் கறுவிக்கொண்டே வெளியில் வேறுபாடு தெரியாமல் பழகினார் தத்துவப்பிரகாசர்.

அன்றிரவு சாளுவநாயக்கர் மாளிகையிலேயே அவர் உணவு உண்டார். புலவர் தம் அருகே அமர்ந்து உண்ணத் தகுதியற்றவர் என்று காட்டிக் கொள்வது போல் நடந்து கொண்டார் நாயக்கர். தத்துவப் பிரகாசருக்குத் தன்மானக் கொதிப்பு முள்ளாகக் குத்தியது. பொறுமையைக் கடைப்பிடித்தார். புலவர் உண்டு முடிந்ததும், “உங்களுக்குப் படுத்துக் கொள்வதற்காகத் தனி வீடு ஏற்பாடு செய்திருக்கிறேன். நீங்கள் அங்கேயே போய்ப் படுத்துக் கொள்ளலாம். நாம் மறுபடியும் நாளை காலையில் சந்திக்கலாம்” என்றார் சாளுவ நாயக்கர். புலவருடைய மனவேதனை முன்னிலும் அதிகமாயிற்று.

சாளுவ நாயக்கர் ஒரு காவற்காரனைக் கூப்பிட்டு, “அடே புலவரை அழைத்துக் கொண்டு போய் அவருக்காக ஏற்பாடு செய்திருக்கும் வீட்டில் படுக்கச் செய்.வேண்டிய வசதிகள் செய்து கொடு” என்று உத்தரவிட்டு விட்டார். காவற்காரன் தத்துவப் பிரகாசரை அழைத்துக் கொண்டு போனான்.

தாம் படுத்துக் கொள்ளும் விடுதியாக ஏற்பாடு செய்திருந்த வீட்டைப் பார்த்தாரோ இல்லையோ, தத்துவப்பிரகாசருடைய கொதிப்பு முன்னிலும் நான்கு மடங்காகியது.

வீட்டைச் சுற்றிப் பார்த்தார். வீடா அது? ஏதோ ஒரு பாழடைந்த கட்டிடம். காலைத் தரைமேல் வைக்க வேண்டுமே என்று அசிங்கப்படுகிற அளவு புழுதி. கும்பல் கும்பலாக மூட்டைப்பூச்சி அடைந்திருந்தது. அந்த வீட்டிலிருக்கும் அவ்வளவு மூட்டைப் பூச்சியையும் ஒன்று சேர்த்தால் ஒரு கலத்துக்கு மேல் தேறும் போலிருந்தது. வீட்டின் முக்கால் பகுதி

உ.பூ.-10