பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

தமிழ் இலக்கியக் கதைகள்

நாவலருக்கு என்றைக்காவது தூதுவளைக் கீரையில் ஆசை விழுந்து விட்டதென்றால் மாணவர்கள் காட்டிலும், புதரிலும் அலைந்து தூதுவளை செடியைக் கண்டு பிடித்துக் கீரையும், காய்களும் கொண்டு வந்தாக வேண்டும். நாவலர் மனைவி, மாணவர்களைக் கூப்பிட்டுத் திடீரென்று உத்தரவு போட்டு விடுவாள்.

அன்றொரு நாள் அப்படி நடந்தது. நாவலர் நிறையக் காரிகைச் செய்யுள்களை மனப்பாடம் செய்யச் சொல்லி உத்தரவு போட்டிருந்தார். அதே சமயத்தில் தூதுவளைக் கீரை கொண்டு வரச் சொல்லி நாவலரின் மனைவியும் உத்தரவு போட்டு விட்டாள்.

காரிகையும் ஒப்பித்தாக வேண்டும். தூதுவளைங் கீரையும் கண்டு பிடித்துக் கொண்டு வந்தாக வேண்டும். மாணவர்கள் புறப்பட்டார்கள்.

செம்மற்பட்டி என்ற இடத்துக்கருகில் காட்டில் துரதுவளை கீரை கண்டு பிடிப்பதற்காக அலைந்தார்கள். மனப்பாடம் செய்ய ஒரு சுருக்கமான வழியும் தயாராயிருந்தது அவர்களிடம். ஒருவன் கையில் காரிகை ஏட்டைக் கொடுத்து விட்டால் அவன் அதைப்பார்த்து இரைந்து படிப்பான். அவன் படித்ததைக் கூர்ந்து கேட்டுத் திரும்பத் திரும்பச் சொல்லி மற்றவர்களும் இரைந்து மனனம் செய்வார்கள்.

அலைந்து திரிந்து ஒரு மட்டில் துாதுவளை செடிகள் இருந்த இடத்தைக் கண்டு பிடித்தாகிவிட்டது. கையில் முள் பட்டு விடாமல் தூதுவளை செடியில் காயும் கீரையும் பறிப்பதற்குப் போதுமான பழக்கம் வேண்டும். நான்கு மாணவர்கள் கீரை, காய் பறிப்பதற்காகச் செடிக்கு அருகே குனிந்து உட்கார்ந்தனர்.

மற்றொரு மாணவன் மனப்பாடம் செய்வதற்காகச் சொல்ல வேண்டிய காரிகைச் சுவடியை விரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தான். அடுத்த விநாடியிலிருந்து அந்த அத்துவானக் காட்டின் புதர்களுக்கு நடுவிலிருந்து காரிகைத் தமிழ்க் கவி ஒலித்தது.