பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தமிழ் இலக்கியக் கதைகள்

இளைத்த இடைமடவா ரெல்லாரும் கூடி
வளைத்திழுத்துக் குட்டா மலுக்கு”

பின்னிரண்டு அடியையும் பாடி முடித்ததும், “வருகிறோம் ஐயா! வணக்கம்” என்று குத்தலாகச் சொல்லி விட்டு இரட்டையர்கள் வேகமாக அந்த இடத்திலிருந்து நழுவினர். அதற்கு மேலும் அங்கே தங்கியிருக்க அவர்களுக்குப் பைத்தியமா என்ன? சம்பந்தனுக்குத் தம்முடைய முதுகில் யாரோ சவுக்கினால் ஓங்கி அடித்துவிட்ட மாதிரி இருந்தது. வெட்கம் பிடுங்கித் தின்றது. பரிகாரிக்கு முன்னால் குருடும் நொண்டியுமாக வந்த அந்த இரண்டு பஞ்சைப் புலவர்களும் அப்படித் தம்மை அவமானப்படுத்தி விட்டார்களே என்று தவித்தார் அவர். அப்போது அவருக்கு வந்த கோபத்தில் அரை குறையாக சவரம் பண்ணிக் கொண்ட தோற்றத்தோடு மட்டும் இருக்காவிடில் தெருவில் ஒடிப்போய் அந்தப் புலவர்களைத் துரத்தியாவது , உதைத்திருப்பார் அவர்! அப்படி அந்தப் பாட்டின் அர்த்தம்தான் என்ன?

“திருவண்ணாமலையில் சம்பந்தன் ஏன் சவரம் பண்ணிக் கொள்கிறான் தெரியுமா? சிறுசிறு பெண்களெல்லாம் விளையாட்டாக அவன் குடுமியை வளைத்து இழுத்துப்பிடித்துக் கொண்டு தலையில் குட்டிவிட்டுப் போகிறார்கள். அந்தக் குட்டு வலி பொறுக்க முடியாமல்தான் சம்பந்தன் குடுமியையே சவரம் பண்ணிக் கொள்கிறான்” என்பதுதான் பாட்டின் கருத்து. எவ்வளவு குறும்புத்தனமான கற்பனை பாருங்களேன்! அந்தக் குறும்புத்தனத்திலேயே சம்பந்தன் சொன்ன நிபந்தனையும் நிறைவேறியிருந்தது!

53. பத்து ரூபாய் பணம்

சீர்காழி அருணாசலக் கவிராயரை இராமாயணக் கதை தெரிந்த எல்லோரும் நன்றாகத் தெரிந்து கொண்டிருப்பார்கள். அவர் இயற்றிய இராம நாடகக் கீர்த்தனைகள் தமிழ் நாட்டு