பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
54. கற்பனைக்கு ஒரு கவிதை

நாள்தோறும் கதிரவன் உதிக்கிறான். நாள்தோறும் தாமரை மலருகிறது.நாள்தோறும் குமுத மலர் கூம்புகிறது. நாள் தவறாமல் நாமும் இந்த நடைமுறைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இந்த நடைமுறைகளிலிருந்து மேலே சிந்தனையைப் படரவிட்டு நுண்ணிய கற்பனைகளைச் செய்யும் திறம் நமக்கில்லை.

இதே கதிரவனையும் தாமரைப் பொய்கையையும் பொருளாக வைத்துக்கொண்டு கவிகள்தாம் எத்தனை எத்தனை கற்பனைகளைச் செய்து விடுகிறார்கள்!

‘சேற்று மண்ணில் பிறந்தும் சேறுபடாமல் நீர்மேல் தூய்மையாக மிதக்கும் தாமரைப் பூவைப் போல நீ மண்ணிற் பிறந்தாலும் மனத்தில் மண் படாமல் உயர்ந்த எண்ணங்களில் அதை நிலைநிறுத்து’ என்று கற்பனையை உவமையாகப் படரவிட்டுச் சிந்திக்கிறார் ஒரு கவி.

‘தண்ணீரில் கிடக்கிறவரை தாமரை இலை எத்தனை நாளானாலும் வாடுவதில்லை. சூரியனும் அதை வாட்டி உலரச் செய்வதில்லை. ஆனால் அதே தாமரை இலையைத் தண்ணீரிலிருந்து பிடுங்கிக் கரையில் எறிந்து விட்டால் முன்பு வாட்டாமல் இருந்த அதே சூரியன் கடுமையாக வாட்டிச் சருகாக்கி விடுகின்றான். இடம் பெயர்ந்து தன்நிலை தடுமாறிச் செய்யத் தகாததைச் செய்தால் அறமே பகையாகி வாட்டும் என்பதை அல்லவோ இவ்வுண்மை காட்டுகிறது’ என்று இன்னொரு கோணத்தில் கற்பனை செய்கிறார் ஒருவர்.

தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பதை உலக மாயையில் படியாமல் உலகத்தில் வசிப்பதற்கு வேதாந்திகள் உவமை சொல்லியிருக்கிறார்கள்.

மனத்தையும் கண்களையும் மூடிக்கொள்ளாமல் சிந்தனையோடும், உற்சாகத்துடனும் உலகத்தைப் பார்க்கிறவர்களுக்கு