பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

தமிழ் இலக்கியக் கதைகள்

பாடல்களைப் பாடித் தற்செயலாக அந்தக் கட்டுப்பாடுகளும் அமைந்து விடும்படி செய்கிறவர். இத்தகைய அசாதாரணத் திறமை வாய்ந்த கவிகளைத்தான் தமிழில் ‘ஆசுகவி’ என்பது வழக்கம். காளமேகப் புலவர் பாடியவற்றில் மற்றவர்களைத் தூற்றிப் பாடிய வசைப் பாடல்களே அதிகம். வஞ்சப் புகழ்ச்சி யாகவும் பழிப்பாகவுமே அவர் மிகுதியாகப் பாடியுள்ளார். பெரும்பாலும் அவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயத்தில் பாடியவை.

சீரங்கத்தில் ஆச்சாள் என்று ஒர் ஏழைப் பெண் ஒரு சாப்பாட்டுக் கடை மாதிரி வைத்துக் கொண்டு நாலைந்து பேருக்குச் சமையல் பண்ணிப் போட்டுப் பிழைத்து வந்தாள். ஆச்சாளுக்கு நடுத்தர வயது. அவ்வளவாகப் புத்தி கூர்மை கிடையாது. விவரம் தெரிந்தவளும் இல்லை. கொஞ்சம் அச்ட்டுத்தனமாக நடந்து கொள்கிற சுபாவமுள்ளவள். அவளிடத்தில் காசு கொடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் வேறு வழி இல்லாததால்தான் அப்படிச் செய்தார்களே ஒழிய, அவள் சாப்பாட்டின் பேரிலுள்ள விருப்பத்தால் சாப்பிடவில்லை. சாப்பிடுகிறவர்களின் வசதி, பசி, ருசியறிந்து அவர்களுக்கேற்ப வகையாகச் சமைத்து நிதானமாகப் பரிமாறி உபசரிக்க ஆச்சாளுக்குத் தெரியாது. ஏதோ ஒடியாடிச் சாப்பாடு போட்டோமென்று பேர் பண்ணி விடுவாள். அவள் சமையலைவிட மோசமாக இருக்கும், இலையில் சமைத்ததைப் பரிமாறுகிற முறை. ஏதோ கடனுக்குச் செய்கிற காரியம் மாதிரிப் பரிமாறுவாள்.

இப்படிப்பட்டவளிடம் குறும்புத்தனமும் முன்கோபமும் நிறைந்த காளமேகப் புலவர் ஒருநாள் சாப்பிட வந்தார். வந்திருப்பவர் காளமேகப் புலவரென்று ஆச்சாளுக்குத் தெரியாது. தெரிந்தாலும் அதற்காகப் புது மரியாதைகள் எதையும் அவள் செய்யத் தயாராயில்லை. காளமேகப் புலவர் அவள் செயல்களையும் அவற்றிலிருந்த அலட்சியமான போக்கையும் அங்குச் சாப்பிடுவதற்காக உட்கார்ந்த விநாடியிலிருந்து கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தார்.