பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பார்த்தசாரதி

192

பழைய தலைமுறையில் மொழியைத் தெய்வமாக வணங்கினோம்! அதில் தெய்வத்தன்மை அமைந்து அற்புதங்களை விளைத்தது. இப்போது வாழ்வதற்கான சாதாரண கருவியாகத் தமிழ் மொழியை எண்ணி விட்டோம். அதனால் மொழியும் சாதாரணமாகி விட்டது. வயிற்றுக்குச் சோறு, உடலுக்கு உடை ஆசைக்குச் செல்வம் என்பது போல் மொழியும் ஒரு தேவையாகி விட்டது. ஆனால் அந்த நாளில், அது தெய்வத்தின் ஒலி வடிவமாக மதிக்கப்பட்ட தலைமுறையில் நடந்த அற்புதத்தை இங்கே காணலாம்.

பதினெட்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் திருக்கடவூர் என்ற சிவத்தலத்தில் அபிராமி பட்டர் என்ற அடியார் ஒருவர் இருந்தார். அவர் உள்ளம் அன்பு மயமானது. அருள் பழுத்த கவிதைகளை இயற்றும் இயல்பு அவருக்கு உண்டு. தாம் எதைச் செய்கிறாரோ, அதைப் பிடிவாதமாகச் சாதித்து வெற்றி பெறும் தர்க்க சாத்திர்த்தில் அவருக்கு இணையற்ற திறமை உண்டு. அவருடைய காலத்தில் தஞ்சாவூரை ஆண்டு வந்த சரபோஜி மன்னரிடத்தில் அமாவாசை நாளைப் பெளர்ணமி என்று கூறிவிட்டுத் தம் திறமையால் இறுதிவரை தவற்றை ஒப்புக் கொள்ளாமல் வாதிட்டு வெற்றிக் கொடி நாட்டினார் அவர்.

திருக்கடவூரில் வாழ்ந்த ஆதி சைவர்களுள் ஒருவராகிய அபிராமி பட்டர், அவ்வூர் அபிராமி அம்மன் மீது இணையற்ற பக்தி செலுத்தி வந்தார். இறைவியை நினைந்து நினைந்து உருகி அன்பு முதிர்ந்த அவர் உள்ளத்தில் தியானங்கள் பழுத்தன. ‘அபிராமியந்தாதி’ என்று ஒரு பிரபந்தத்தை இயற்றினார் அவர் ஒவ்வொரு பாடலும் ஒரு அருட்கனியாகக் கனிந்திருந்தது. புலன்களைத் தேனீக்களாக்கி ஆன்மக் கூட்டில் திரட்டிய தேனாகிய அன்பையே கவிதைகளாகப் பாடியிருந்தார் அவர்.

கோவிலில் அம்பாளின் திருமுன்பு நின்று கொண்டே அவர் அந்தப் பாடல்களை ஒவ்வொன்றாகப் பாராட்டி அரங்கேற்றினார். பாடும் போது அபிராமி பட்டரின் உடலும் உள்ளமும் தன் வசத்திலேயே இல்லை.உள்ளம் நெக்குருகி மெய்சிலிர்த்துப் பக்திப்