பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பார்த்தசாரதி

195

என்ற பாட்டை அவர் பாடிக் கொண்டிருந்த போது உண்மையாகவே அவர் உடம்பின் மேல் ஏதோ வந்து விழுந்ததை உணர்ந்து ஆச்சரியத்தோடு கண்களைத் திறந்தார்! என்ன ஆச்சரியம்! அம்பாளுடைய செவித் தோடுகள் இரண்டும் அபிராமி பட்டர் மேல் வீசி எறியப்பட்டு அவர் அருகில் கிடந்தன. உடல் சிலிர்த்தது அபிராமி பட்டருக்கு அம்பாளை ஏறிட்டுப் பார்த்தார். அவள் செவிகள் இப்போது மூளியாக இருந்தன.

“தாயே! என்னைச் சோதிக்கிறாயா?” என்று அலறினார் அபிராமி பட்டர். “இல்லை! உன் தமிழுக்கு என் பரிசு இவை. ஏற்றுக் கொள்” என்று அவர் காதில் மட்டும் கேட்கும் ஓர் இனிய குரல் ஒலித்து ஓய்ந்தது. அந்தத் தெய்வீகத் திருக்குரலைக் கேட்ட மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணிர் சொரிந்தபடியே நின்றார் அபிராமிபட்டர்.

66. தேசத் தொண்டர் சீற்றம்

சில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை மாவட்டத்தில் உத்தமபாளையத்துக்கு அருகிலுள்ள அனுமந்தன்பட்டி என்னும் சிற்றுாரில் சிறந்த தேசத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.அந்த நாளில் தேசப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற தியாகிகளில் அவரும் ஒருவர்.

‘அனுமந்தன்பட்டி கிருஷ்ணசாமி ஐயங்கார்’ என்று அவருடைய பெயரைச் சொல்லிய அளவில் மதுரை மாவட்டத்தின் மேற்குச் சீமையில் நன்றாகத் தெரிந்து கொள்ளுவார்கள். அவர் தேசத் தொண்டர் மட்டுமல்லர். சிறந்த கவிஞர். பரம்பரைப் பாவலர்கள் பலர் பிறந்த மரபில் வந்தவர். நினைத்த அளவில் தாம் நினைத்த கருத்தைப் பாட்டாகச் சொல்லும் திறமை அவருக்குண்டு. இராமாயண வெண்பா, செம்பை நாற்பது போன்ற கவிதை நூல்களையெல்லாம் அவர் இயற்றியிருக்கிறார்.