பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தமிழ் இலக்கியக் கதைகள்

அந்த உள்ளத்தின் விரிவுக்கேற்ப உடைமையின் விரிவு அங்கே இல்லை.”

நமச்சிவாயப் புலவர் இப்படியெல்லாம் எண்ணி உள்ளம் வெதும்பி வாடியதெல்லாம் செல்லூர் வள்ளலைக் காண்பதற்கு முன்னால்தான். செல்லூர் வள்ளலைக் கண்ட பிறகு, அவருடைய இனிய மொழிகளாலும் வரவேற்பாலும் அன்புப் பணிகளாலும் மேற்கூறிய மூன்று இயல்புகளும் அவரிடம் குறைவற நிறைந்திருப்பதைப் புலவர் அறிந்துகொள்ள நேர்ந்தது. அப்படி ஒரு மனிதர் இருப்பார் என்று அதுவரை அவர் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. புலவர்களோடு பழகுவதிலும் அவர்களைப் போற்றுவதிலும் அவர்கள் புலமையை இரசிப்பதிலும் இவ்வளவு பேரார்வம் உள்ள ஒரு வள்ளலைக் கற்பனையில் கூட அவர் எண்ணியதில்லை. அவ்வளவு அருங்குணங்களும் செல்லூர் வள்ளலினிடம் மிக மிகச் சிறப்பாகக் குடி கொண்டிருந்தன. இப்படிப்பட்ட ஒரு வள்ளலைத் தம் ஆயுள் முழுவதும் வாய்ஓயாமல் பாடிக் கொண்டிருக்கலாம் போலத் தோன்றியது நமச்சிவாயப் புலவருக்கு. சில நாள் அந்த வள்ளலுடைய விருப்பத்தைத் தட்ட முடியாமல், அவருடனேயே இருந்தார் புலவர். ஜன்மம் முழுவதும் அப்படி இருந்துவிடக்கூட அவர் மறுத்திருக்கமாட்டார். ஆனால், ஊரில் மனைவி மக்களின் நிலைதான் வள்ளலிடம் விரைவில் புலவரை, ஊர் செல்ல விடை கொடுக்குமாறு கேட்பதற்குத் தூண்டியது.

அரை மனத்துடன், புலவரைப் பிரிய மனமின்றி விடை அளித்த செல்லூர் வள்ளல், நிறைந்த பெரும் பரிசில்களை அவருக்குக் கொடுத்தார். ஊருக்குப் புறப்படும்போது இரண்டாவதாக மீண்டும் வள்ளலிடம் சொல்லிக்கொள்வதற்காக உள்ளே சென்றார் புலவர். உள்ளே வள்ளலைக் கண்டு கை கூப்பி வணங்கியவாறே போய் வருவதாகச் சொன்ன அவரது கூப்பிய கையைக் கூர்ந்து நோக்கிய வள்ளல், புலவருக்குப் பதில் வணக்கம் செய்துவிட்டு அவரை அருகில் வருமாறு அழைத்தார்.