பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ் இலக்கியக் கதைகள்


1. என்று விடியும்?

ண்ணும் காதும் படைத்த மனிதர்கள்தாம் கவிஞர்களாக இருக்க வேண்டுமென்ற நியதி இல்லையே? கற்றுத் தேர்ந்து முற்றிய கவிஞர், வாழ்வின் இடையே அவற்றை இழக்க நேரிட்டாலும் கவிதைக்கு என்றும் அழிவேயில்லை. அது சாகாக் கலை:

சிதைவுகளை வென்றுகொண்டே வளரும் சீரிய கலை. பதினெட்டு முதல் இருபது நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் அங்கங்கே அவ்வப்போது தாம் வாழ்ந்த காலத்தில் புலவர் பலர் பாடிய சில்லறைப் பாடல்களின் தொகுதியே தனிப்பாடல் திரட்டு, பல சந்தர்ப்பங்களின் இயற்கையான உணர்வுடன் பாடிய இத் தனிப் பாடல்கள் எல்லாம் படிக்க அருஞ்சுவையும் இனிமையும் நல்குவன. கடையில் கூடைகூடையாக வைத்திருக்கும் கொய்யாப்பழங்களைக் காட்டிலும் தோட்டத்தில் மரத்திலிருந்து உதிர்ந்த கொய்யாப்பழம் அணில் கடித்ததாக இருப்பினும் சுவை மிக்கதாகத் தெரிகிறதல்லவா? அதுபோல வரன் முறை வகுப்புக்கள் பிறழாமல் இயற்றப்பட்ட காவியங்களும் பிரபந்தங்களும் ஒருபுறம் இருந்தாலும் நினைத்தபோது நினைத்தவாறு பாடிய தனிப்பாடல்களின் சுவை தனிப்பட்ட இனிப்பை உடையது. இந்த உண்மையை மெய்ப்பிப்பது போல அமைந்துள்ளன தனிப்பாடல் திரட்டில் காணப்படும் இரட்டையர் கவிதைகள், அந்த இன்பம் இரட்டையர்கள் பாடல் மூலம் முதலில் இங்கே தோற்றுவாய் செய்யப்படுகிறது.