பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

89

முகத்தோடு அவரை வரவேற்று அன்புடன் வேண்டிய உதவியைச் செய்வதற்கு ஆனந்தரங்கம் தவறியதில்லை.

ஆனால் அந்த முறை புலவர் வந்திருந்த போது மேலே கூறியவாறு அரசாங்க சம்பந்தமான சில சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டு தவித்த நிலையிலிருந்தார் பிள்ளை. எனவே கவிராயர் வந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் அவரைக் கவனிக்காமல் இருந்துவிட்டார். மதுரகவிராயர் அவசரமான உதவியை நாடி வந்திருந்தாலும் ரங்கப் பிள்ளையின் ‘இந்தத்துன்ப நிலையை’ உணர்ந்து பொறுத்துக் கொண்டார்.

நான்கு ஐந்து, ஆறு. ஏழு என்று வரிசையாக எழு நாட்கள் கழிந்துவிட்டன. மதுரகவிராயர் மேலும் பொறுத்திருந்தார். புலவர் வந்த இரண்டொரு நாட்களிலேயே அவர் வந்திருப்பதைக் கவனித்துக் கொண்டாலும் ஆனந்தரங்கர் தம் போக்கிலேயே இருந்துவிட்டார். அவருடைய அப்போதைய மனநிலை எதிலும் பற்றாத வெறுப்பு எண்ணங்களில் சிக்கிக் கிடந்ததனால் புலவரைக் கண்ட பின்புங்கூட ‘இவர் வந்து காத்துக்கிடக்கிறாரே! என்னவென்று விசாரித்து அனுப்புவோம்’ என்ற நினைவே அவருக்கு எழவில்லை. எதைக் கண்டாலும் எரிந்து விழுதல், எதிலும் பற்றில்லாத சினவுணர்ச்சி, இப்படி இருந்த அவருடைய அப்போதைய மனேபாவத்திற்குக் காரணம் அந்தப் பழைய அரசாங்கத்தைப் பற்றிய சிக்கல்களே. அதைத் தீர்க்கும் முயற்சியில் பூரணமாக ஈடுபட்டிருந்தும் விரைவிலே வெற்றிபெற முடியாமல் இருந்ததனால் தான் அவர் இத்தகைய உள்ளப் பான்மையை அடைந்திருந்தார். -

இன்னும் ஒரு மாதம் அப்படிப் பொறுத்திருக்க வேண்டும் என்றாலும், மதுரகவிராயரால் பொறுக்க முடியும். ஆனால் அதற்கு முன்பெல்லாம் நகைமுகத்தோடு வரவேற்றுப் போற்றியவர் அப்போது ‘வா’ என்று கூடச் சொல்லவில்லை.இந்த ஏழு நாட்களிலும் தாமாக அவர் கவனத்தில் தென்படும் சந்தர்ப்பங்களை மிகுதியாக ஏற்படுத்திக் கொண்டும், அவர் கவனித்திருந்தாலும் கவனியாததுபோல நடந்து கொண்டார்.