பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

91

கொக்குப் பறக்கும் புறா பறக்கும்
குருவி பறக்கும் குயில் பறக்கும்
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்
நான் ஏன் பறப்பேன் நராதிபனே
திக்கு விஜயம் செலுத்தி உயர்செங்
கோல் நடத்தும் அரங்காநின்
பக்கம் இருக்க ஒருநாளும் பற
வேன் பறவேன் பறவேனே!”

இடி முழக்கம் போன்ற குரலில் இந்தப் பாடலின் முதல் இரண்டு அடிகளைப் பாடிவிட்டுச் சிறிதுநேரம் நிறுத்திப் பின் இரண்டு அடிகளைச் சுபாவமான குரலில் பாடினார். சோற்றுக்கு வழியின்றி அலைபவர்களை ‘நக்குப் பொறுக்கிகள்’ என்று கூறி இகழ்வது நாட்டு வழக்கிலுள்ள மொழி. அதை இரண்டாம் அடியின் முதலில் எதுகையாக வைத்து ‘நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்’ என்று வல்லின ஓசையை அழுத்திப் பாடும்போது வள்ளல் கூறிய சொற்களால் புலவர் மனம் எவ்வளவு புண்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இறுதியில் நின் பக்கம் இருக்க ஒருநாளும் பறவேன்’ என்று கூறி வள்ளலைத் தழுவிக் கொண்டதைக் கேட்ட பின்பும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பரிசிலளித்து அனுப்பாமல் வேறு என்ன செய்வார் பிள்ளை?

34. முதலும் முடிவும்

சோழ வேந்தனது அவைக்களம், சோழன் கம்பீரமாக அரியணையில் அமர்ந்திருந்தான். அவன் அருகில் வலது பக்கம் சோழ ராஜ்யத்தின் ஆஸ்தான கவிஞர் ஒட்டக் கூத்தர் சிங்க ஏறு போலச் செம்மாந்து வீற்றிருந்தார். இடது பக்கம் சற்றுத் தாழ்வான ஓர் அசனத்தில், முதல் நாள் பாண்டிய நாட்டிலிருந்து அரசனின் தூதுவராக வந்திருந்த புகழேந்திப் புலவர் உட்கார்ந்திருந்தார்.