பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் # 67 மறைத்தல் இயலாது. இவனுடைய கரவொழுக்கத்தைக் கண்டு அவை தமக்குள்ளே சிரிக்கும்.அகத்தே நகும்-என்கின் றார். வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் (271) என்பது வள்ளுவம். இந்த ஐந்து பூதங்களும் இவன் தீய வொழுக்கத்திற்குச் சான்றாக நின்று குற்றவாளியாக்கி அவனை மிக வருத்தி விடும். தன் நெஞ்சம் அறிந்த குற்றத் திற்கு ஆளாகும்போது புறத்தில் வானம்போல் உயர்ந்த தவக்கோலம் கொள்வதால் யாது பயன்? (272). மனத்தை நன்னெறிப்படுத்தும் ஆற்றல் இல்லாமல் தவக்கோலம் கொள்வதால் பிறரை வஞ்சிக்கும் தன்மை மிகுதியாகும். தவக்கோலத்தைக் கண்டு ஒரு தீங்கும் இல்லையென்று நம்பி மகளிரும் பிறரும் ஐயமின்றி நெருங்கி அன்புடன் பழகுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். அந்த வாய்ப்பைத் தன் தீயொழுக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்வது எளிதாகும். இவ்வாறு தன் தவக்கோலத்தைக் கொண்டு நம்பியவர்களை வஞ்சிப்பது பசு புலித்தோலைப் போர்த்துப் பைங்கூழை மேய்வதை ஒத்தது. பசு தன் வடி வில் பயிரை அணுகினால் அது பயிரை மேய்ந்து விடும் என்று காவலர் கடிவர் : புலித்தோலைப் போர்த்து வந்தால் புலி பயிரை ஒன்றும் செய்யாது என்று எண்ணியும் புலிக்கு அஞ்சியும் வாளா இருப்பர். அது போல் தீய ஒழுக்க முடையான் மற்றவர்களைப்போல் வந்தால் மகளிரும் பிறரும் அவனைக் கடிந்து தம் ஒழுக்கத்தைக் காத்துக் கொள்வர்; ஆனால் அவனே தவக் கோலத்துடன் தோன் றினால், இந்தத் துறவியால் நம் வாழ்வுக்குக் கேடில்லை' என்று எண்ணியும், தவக்கோல முனிவர் நமக்கு ஆசி கூறி நம் வாழ்வையும் மேம்படுத்துவர்' என்று போற்றியும் இறுதியில் ஏமாற்றமும் அடைவர்.