பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

தமிழ் இலக்கிய அகராதி என்னும் இந்நூல், கல்லூரிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும், இடைநிலைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கட்குப் பாடநூலாக வரும் இலக்கியங்களிலும் உரைநடைகளிலும் காணப்படும் சொற்களுக்குரிய பொருள்களை நன்கு உணர்தற்கான வழிகளில் தொகுத்து எழுதப்பட்டுள்ளது. இலக்கிய மொழிகளேயன்றி உலக வழக்கு மொழிகளுக் குரிய பொருள்களையும் இது தன்னகத்துக் கொண்டுள்ளது. அடிக்கடி நூற்களின் வாயிலாகவும், பேச்சுவழக்கின் வாயிலாகவும் காணப்படுகின்ற வட சொற்களுக்கும் சாஸ்திர சம்பந்தமான சொற்களுக்கும் பொருள் அறிய இது துணை செய்யவல்லது. இவ்வகராதி கையகத்திருப்பின் சொற்களின் பொருளை முட்டின்றிப் பிறர் உதவியின்றி அறிந்து கொள்ளலாம்.

இந்நூல்,சொற்களுக்குரிய பொருளை அறிதற்குத் துணை செய்யவதோடு நில்லாமல், தொகைச் சொற்கள், தொடர் மொழிகளின் விளக்கங்கள், தொண்னுாற்றாறு வகைப் பிரபந்தங்கட்குரிய விளக்கங்கள், நூல்கள் பலவற்றினைப் பற்றியும், புலவர்களில் பலரைப் பற்றியும் குறிப்புக்கள் கொண்டு திகழ்கிறது. ஆகவே, தமிழ் நூல்களைப் பற்றியும், ஆசிரியர்களைப் பற்றியும் ஒருங்கே அறிதற்கு இந்நூல் பெருந்துணை செய்வதால், இது பயன் பெரிதும் உடையதாகித் தமிழ் நாட்டிடையே தன்தொண்டை இனிதின் இயற்றும் என்பது எனது நம்பிக்கை. இந் நூலை அழகுற அச்சிட்டு வெளியிட்டுள்ள ஸென்டரல் புக்டிப்போ உரிமையாளர்க்கு எனது உளம் கலந்த நன்றி என்றும் உரித்தாகும்.

இந் நூலைத் தமிழ் உலகம் ஏற்று இத்துறையில் மேல் மேலும் ஊக்க உறுதுணை செய்ய வேண்டுகின்றேன்.

21—3–’57 வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார்.