பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/455

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அட்ட பிரபந்தம்

451 அமுதாம்பிகை


அட்ட பிரபந்தம் = இது அழகிய மணவாளதாசர் என்னும் பிள்ளைப் பெருமாள் ஐயங்காரால் இயற்றப்பட்டது. இதில் எட்டு நூல்கள் அடங்கியுள்ளன. அவையே திருவரங்க்க் கலம்பகம், திருவரங்கத்தந்தாதி, ஸ்ரீ ரங்கநாயக்கர் ஊசல், திருவரங்கமாலை, திருவேங்கடத்தந்தாதி, திருவேங்கடமாலை, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி, அழகர் அந்தாதி, என்பன. "அஷ்டபிரபந்தம் படித்தால் அரைப்பண்டிதர்" என்னும் பழமொழி இந்நூற் பெருமையை உணர்த்தும். இத்தொகுப்பு நூலால் திருமாலின் சிறப்பு, வைணவத்தின் மேன்மை முதலியவற்றை அறியலாம். இதற்குச் சிறந்த முறையில் திருவல்லிக்கேணி சடகோப ராமனுஜாச்சாரியார் உரை எழுதியுள்ளார். இதன் காலம் கி. பி. 17-ஆம் நூற்றாண்டு.

அபிதான சிந்தாமணி = இந்நூல் சிங்காரவேலு முதலியாரால் எழுதப்பட்டது. இந்நூலில் தமிழ்நூல்களைப் பற்றிய குறிப்புக்களையும், புலவர்களின் வரலாற்றுக் குறிப்பையும் நன்கு உணரலாம். ஆங்கிலத்தில் உள்ள என்ஸைக்லோபிடியாவைப் போன்று தமிழ் என்ஸைக்கிலோபிடியா என்றும் இதனைக் கூறலாம். ஆனால் இது சுருங்கிய அளவில் உள்ளது. இது கி. பி. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொகுக்கப்பட்டது.

அபிராமி அந்தாதி = அபிராமிபட்டரால் இயற்றப்பட்ட நூல். இது திருக்கடவூர் தேவியாம், அபிராமி அம்மையார் மீது பாடப்பட்டது. தேவியின் திருவருள் பெறுதற்குப் பெருந்துணை செய்யவல்லது. இதன் காலம் கி.பி.18 ஆம் நூற்றாண்டு. இது 102 செய்யுட்களை உடையது. இந்நூலைப்பாடி அம்மாவசைத் தினத்தன்று பூரணசந்திரனை இந்நூல் ஆசிரியர் காட்டியுள்ளார்.

அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் = இது குளத்துார் அமுதாம்பிகை அம்மையார் மீது பாடப்பட்ட நூல். சிவஞான முனிவரால் இயற்றப்பட்டது.