பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/480

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காழிக் கோவை

476

குசேலோபாக்கியானம்


காவிரியாறு உற்பத்தியான விதமும், இப்பெயருடன் அவ் ஆறு விளங்குதற்குரிய காரணமும் கூறப்பட்டுள்ளன. காலம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு.

காழிக் கோவை = இது சீர்க்காழித் தலத்தின் மீது பாடப்பட்டது. இதைப் பாடியவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. காலம் கி. பி. 19-ஆம் நூற்றாண்டு. இது அகப்பொருள் நூல்.

காளத்திநாதர் உலா = சேறைக் கவிராச பிள்ளையால் பாடப்பட்டது. இதன் மூலம் ஸ்வர்ணமுகியாற்றின் மேன்மை, காளத்தி மலையின் மாண்பு முதலானவற்றை அறியலாம். காலம் கி. பி. 16-ஆம் நூற்றாண்டு.

காளத்தி புராணம் = இதனைக் கருணைப்பிரகாசர், சிவப்பிரகாசர், வேலைய தேசிகர் ஆகியமூவரும் பாடி முடித்துள்ளனர். கருணைப்பிரகாசர் பாயிரம் உட்பட முதல் ஐந்து சருக்கங்களையும், சிவப்பிரகாசர் கண்ணப்பர் சருக்கம், நக்கீரர் சருக்கம் ஆகிய இரண்டு சருக்கங்களையும், வேலைய தேசிகர் இறுதியிலுள்ள சருக்கங்களையும் பாடியுள்ளனர். இதில் சிலந்தியும், யானையும், பாம்பும் இறைவனைத் துதித்த வரலாறும், நக்கீரர் வரலாறும், கண்ணப்பர் வரலாறும், வேசிப் பெண்கள் இருவர் பேறுபெற்ற வரலாறும் உண்டு. இதனைச் சீகாளத்தி புராணம் என்றும் கூறுவர். காலம் 17-ஆம் நூற்றாண்டு.

கு

குசேலோபாக்கியானம் = இதனை வல்லூர் தேவராசப் பிள்ளை என்பவர் பாடினர். வல்லூர் தேவராசப்பிள்ளை மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர், ஆதலின், திரு. பிள்ளை அவர்களே இந்நூலைப் பாடித் தம் மாணாக்கரது வேண்டுகோளுக்கிணங்கித் தம் பெயரால் வெளியிடாது தம் மாணவர் பெயரால் வெளியிட்டதாகக் கூறுவர். குசேலரது வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். இவ் வரலாறு பாகவதத்தில் ஒரு கிளைக் கதையாக இருத்தலின், குசேலோ உபாக்கியானம் எனப்பட்டது. உபாக்கியானம் கிளைக்கதை. காலம் கி.பி.19-ஆம் நூற்றாண்டு.