பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/494

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிவஞானபோத உதாரண

490

சிவஞானபோதம்


  
உண்மையை உணர்தற்குப் போதுமானது என்று தாயுமானவரே கூறுவாரானால், இதன் சிறப்பைக் கூற வேண்டுவதில்லை. இந்நூலின் சுபக்கப் பாயிரச் செய்யுள் ஒன்றில் வரும் எடுத்து என்னும் சொல்லுக்குப் பேருரை எழுதி ஒரு தனி நூலாக வடநூற்கடலும், தென்னூற் கடலும் நிலை கண்டுணர்ந்த சிவஞான முனிவர் வெளியிட்டுள்ளார் எனில் வேறு சிறப்பு யாது கூற வேண்டும்?

சிவஞானபோத உதாரண வெண்பா = இந்நூல் தனித்து விளங்குவது அன்று. சிவஞான போதத்தில் வரும் 12 சூத்திரங்களில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு உதாரணமாகப் பாடி அமைக்கப்பட்டது. 81 வெண்பாக்கள் இப்பெயருடன் விளங்குகின்றன. சைவசித்தாந்தக் கருத்துக்களை விளக்க மெய்கண்டாரால் பாடி அமைக்கப்பட்டவை. சிவஞான சித்தியார் போன்ற நூற்களின் கருத்துகளுக்கெல்லாம் முன் வழிகாட்டியாய் இருப்பன. காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு.

சிவஞான போதம் = இது சுத்தாத்துவிதம் எனப்படும் சைவசித்தாந்த
முடிவை விளக்கிக் கூறும் 12 சூத்திரங்களைக் கொண்டது. அளவில் சிறியதாயினும் கருத்தில் மிகப் பெரியது. பிற சமயக் கொள்கைகளை எல்லாம் தர்க்க முறைப்படி கண்டித்துச் சைவசித்தாந்த கொள்கைகளை ஆணித்தரமாக நிலைநாட்டிக் கூறும் நூல். இதனை இயற்றியவர் மெய்கண்ட சிவாசாரிய சுவாமிகள். இதற்குப் பாண்டிப்பெருமாள் உரை எழுதியுள்ளார். இதற்குச் சிற்றுரையும் பேருரையும் சிவஞான முனிவரால் எழுதப்பட்டுள்ளன. பேருரை மாபாடியம் என்று கூறப்படும். சிவஞான சித்தியார் என்பது இந்நூலிற்குச் செய்யுள் வடிவில் உரை கூறுவது போன்று அமைந்த நூல். பதி, பசு, பாச உண்மைகளையும், பதியைப் பசு அடையும் வழி, பாசத்தின் இயல்பு முதலான பலவும் தருக்க முறையில்