பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/614

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரும்பற்றபுலியூர்

610

பொய்கையார்


யால் இப்பெயர் பெற்றவர். குமணன் தன் தலையை வெட்டித் தம்பி கையில் கொடுத்துப் பொருள் பெற்றுச் செல்லுமாறு கத்தியைக் கொடுக்க, அக்கத்தியைப் பெற்று, இளங்குமணனை கண்டு, அறவுரை கூறி, அண்ணனோடு அன்பு கொள்ளச் செய்தவர். ஆவூர் மூலங்கிழார் மகனார். இவர் அகத்தில் 2, நற்றிணையில் 1, புறத்தில் 6, பாடல்களைப் பாடியுள்ளார்.

பெரும்பற்றபுலியூர் நம்பி = இவர் வேம்பத்தூரார் என்றும் கூறப்படுபவர். இவர் மதுரைச் சொக்கநாதர் திருவிளையாடல்களைக் குறிக்கும் நூல் ஒன்று பாடியுள்ளார். அதுவே பழைய திருவிளையாடல் என்பது. இவர் பாண்டியநாட்டு வேம்பத்தூர் கௌணிய மரபுடை அந்தணர். இவரைத் தில்லை நம்பி என்றும் கூறுவர். இவரை செல்லி நகரினர் என்றும் கூறுவர். கி.பி.12ஆம் நூற்றாண்டு.

பே

பேயாழ்வார் = இவர் சென்னை மயிலாப்பூரில் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில், செவ்வல்லி மலரில் தோன்றியதாகக் கூறுவர். இவர் திருமாலின் அன்பில் ஈடுபட்டு, அழுதலும், அலறுதலும், சிரித்தலும் செய்து கொண்டிருந்ததால் பேயர் போலும் என்று ஒரு சிலர் கூறி வந்தது கொண்டு, அப் பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது என்பர். ஆழ்வார் பன்னிருவருள் ஒருவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள இயற்பாவின் மூன்றாம் திருவந்தாதி இவரால் பாடப்பட்டது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டு.

பேராசிரியர் = இவர் சிறந்த உரையாசிரியர். சைவ சமயத்தவர். தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்கும், திருக்கோவையார்க்கும் உரை கண்டவர். குறுந்தொகையில் பல பாடல்களுக்கும் உரை எழுதினர் என்பர். இவரை மதுரை ஆசிரியர் என்றும் கூறுவர். கி.பி.12ஆம் நூற்றாண்டு.

பொ

பொய்கையார் = கடைச்சங்க காலத்தவர். இவர் சேரன்