பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/647

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாசிலாமணி முதலியார்

647

மீனாட்சிசுந்தரம் பிள்ளை


கும், கல்விக்கும் அரிய சேவை செய்து வருபவர். ௸ சங்கத்தின் சார்பில் நடைபெறும் புதுக் கல்லூரியின் முன்னேற்றம் கருதித் தம் மனைவி மக்களையும் பிரிந்து ஓராண்டுக்கு மேல் பர்மா, மலேயா, சிங்கப்பூர் முதலான இடங்களுக்குச் சென்று பணத்தினைத் திரட்டிக் கொணர்ந்தவர். பின்னரும் ஆறுமாத காலம் கடந்து சென்று பணம் திரட்டி வந்தவர். மணிவிளக்கு என்னும் நூலில் அரிய தமிழ்க் கட்டுரைகளை எழுதி வருபவர். தமிழ் மொழி எங்கும் பரவ வேண்டும் என்ற தணியா வேட்கையுடையவர். தமிழ் மாநாடுகட்குத் தலைமை பூண்டு அரிய தலைமைப் பேருரைகளைப் பேசியவர். ஏழை எளியவர்கட்கு தம்மாலான உதவிகளைப் புரிய முன்வருபவர். காலம் கி.பி.20 ஆம் நூற்றாண்டு.

மா

மாசிலாமணி முதலியார் = இவர் சைவ மரபினர். காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள வாலாஜாபாத் என்ற இடத்தில் இந்து மத பாடசாலை என்ற பெயருடன் ஒரு பாடசாலையை அமைத்துத் திறம்பட நடத்திவருபவர். அதன் மூலம் கல்வி கற்பதற்கு மட்டும் பயிற்சி அளிக்காமல், கைத்தொழில் பயிற்சிகள் பலவற்றையும் கற்பதற்குரிய வசதிகளையும் செய்து வருபவர். அப் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு உடல் பொருள் அனைத்தையும் தத்தம் செய்து ஓயாமல் உழைத்து வருபவர். இவரது அயரா முயற்சியினால் இப் பாடசாலை நாளும் நாளும் வளர்ந்து கொண்டே வருகிறது. கி.பி.20 ஆம் நூற்றாண்டு.

மீ

மீனாட்சி சுந்தரம்பிள்ளை தே.போ. = இவர் சென்னை அரசினர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து வருபவர். சைவ சமயத்தினர். எம்.ஏ.பி.எல்., வித்துவான் எம்.ஓ.எல். முதலான பட்டங்களைப் பெற்றவர். வடமொழியிலும் மற்றும் பல மொழிகளிலும் நல்ல புலமை பெற்றவர்.