பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

தமிழ் இலக்கிய வரலாறு


போன்று, திவிட்டன் விசயன் என்ற இரு வடநாட்டு வேந்தர்களின் வரலாற்றினையும், இந்நூல் பன்னிரண்டு சருக்கங்களில் 2331 செய்யுள்களில் கூறுகிறது. பாகவதமும் சூளாமணியும் கதை நிகழ்ச்சிகளிலும் ஓரளவு ஒத்துள்ளன. ஐஞ்சிறு காப்பியங்களில் சுவையான நூல் இதுவேயாம். தோலா மொழித்தேவர் இதன் ஆசிரியர். இவரை விசயன் என்பான் ஆதரித்தான். இந்நூலைப் பற்றிய குறிப்பு. சிரவண பெல்கோலக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் காலம் பத்தாம் நூற்றாண்டாகும்.

'ஆனை துரப்ப அரவுறை ஆழ்குழி
நானவிற் பற்றுபு நாலும் ஒருவன்ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது

மானுடர் இன்பம்; மதித்தனை கொள்நீ.'

என்ற பாடல் உலக வாழ்வின் தன்மையை உணர்த்துகின்றது.

நீலகேசி

குண்டலகேசி என்னும் பௌத்தக் காப்பியத்திற்கு எதிராக எழுந்த சமண நூல் இது: 'நீலகேசித்தெருட்டு" என்றும் வழங்கப்படும். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலுக்குச் சமய திவாகர வாமன முனிவர், 'சமயதிவாகர விருத்தி' என்னும் உரை எழுதியுள்ளார்.

சமணக் காப்பியம் மேருமந்தர புராணம் என்ற நூல், மேரு, மந்தரா என்னும் இரு சகோதரர்களின் வரலாற்றினைக் கூறுகிறது. 1406 செய்யுள் கொண்ட இந்நூல் பன்னிரண்டு சருக்கங்களாய்ப் பிரிக்கப்பட்டுள்ளது. சமணர்கள் அக்காலத்தே கொண்டிருந்த நம்பிக்கையினையும் கோட்பாட்டினையும் இந் நூலில் காணலாம். வாமனாசாரியார் இதனை இயற்றினார்.