பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

தமிழ் இலக்கிய வரலாறு


தஞ்சைவாணன் கோவையில் அமைந்திருக்கும் நானூறு பாடல்களும் காட்டப்படுகின்றன. இது பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுந்த நூல் என்பர்.

யாப்பருங்கலக் காரிகை

தீபங்குடியில் வாழ்ந்த அமித சாகரர் என்ற சமணப் பெரியார் இந்நூலை இயற்றினார். குணசாகரர் இந்நூலின் உரையாசிரியர். ஐந்திலக்கணங்களில் ஒன்றாகிய மாப்புப் பற்றி எழுந்த நூல் இது. இவர் (நூலாசிரியர்) பத்தாம் நூற்றாண்டிலோ, பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ இருந்திருத்தல் வேண்டும்.[1]

யாப்பருங்கல விருத்தி

தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் செய்யுளியல் பாக்களைப் பற்றியும் பாக்களின் அமைப்புப் பற்றியும் விரிவாகக் கூறினாலும், பிற்காலத்தில் தோன்றிய சில புதிய பாவினங்களுக்கும், காலத்தால் வழக்கொழிந்து போனவற் றிற்கும் காரணமாகப் புதியதோர் இலக்கணம் எழ வேண்டிய அவசியம் நேரிட்டது. யாப்பருங்கலமும் யாப்பருங்கலக் காரிகையையும் பிற்காலத்தில் யாப்பு இலக்கணப் பயிற்சிக் காகப் பயிலப்பட்டன. இந்நூல் காக்கைப் பாடினியத்தைப் பின்பற்றியது என்பர். காரிகையைப் பற்றிக்

'காரிகை கற்றுக் கவிபா டுவதினும்

பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று'

என்னும் நூற்பா வழங்குகிறது.

நேமிநாதம்

சமண சமயத்தினரான குணவீர பண்டிதர் இதன் ஆசிரியர். இவர் சான்றோருடைத் தொண்டை நாட்டிலே


  1. திரு. K. S. ஸ்ரீநிவாச பிள்ளை - தமிழ் வரலாறு, ப 341.