பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

தமிழ் இலக்கிய வரலாறு


என்ற முறையில் இந்நூல் இடைக்காலத்தில் எழுந்தது. பழங்காலத்தில் இலக்கணத் துறையில் தொல்காப்பியம் பெற்ற இடத்தினை இடைக்காலத்தில் இந்நூல் பெற்றது எனலாம். தொல்காப்பியனார் காலத்திற்குப் பின்னர் வழக்காறு அற்றுப் போன இலக்கணங்களை விடுத்து, இடைக்காலத் தமிழின் இயைந்த பெற்றிற்கு இணைந்த முறையிலேயே இந்நூலை இயற்றினார் பவணந்தி முனிவர்.

'முன்னூ லொழியப் பின்னூல் பலவினுள்
நன்னூ லாருக் கெந்நூ லாரும்

இணையோ வென்னுந் துணிபே மன்னுக'

என்ற இந்நூல் புகழப்படுகிறது. தன்மையாற் பெயர் பெற்ற நூலுக்கு இந்நூலே உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது. அந்நூலாசிரியர் சனகாபுரத்தில் சன்மதி முனிவரின் மைந்தராய்ப் பிறந்தார்; துறவற நெறியில் நின்ற தூயவராய்த் துலங்கினார்.

'திருத்திய செங்கோற் சீய கங்கன்

அருங்கலை வினோதன் அமரா பரணன்'

என்னும் சிறப்புப் பாயிரத் தொடர்கொண்டு, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவனாய் மைசூரில் கோலார்ப் பகுதியை ஆண்ட சீயகங்கன் என்னும் மன்னனே இந்நூல் தோன்றக் காரணமாயிருந்தான் என்பது தெரிய வருகிறது. எனவே, இந்நூலின் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.

தண்டியலங்காரம்

இது வடமொழியாசிரியர் தண்டி என்பார் இயற்றிய 'காவியாதர்ஸம்' (ஆதர்ஸம் - கண்ணாடி) என்னும் வட நூலின் மொழிபெயர்ப்பாகும். அலங்காரம் என் வடநாலார்