பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலம்

155


வழங்கும் அணிகளைப்பற்றி இந்நூல் கூறுகிறது. நூற்றிருபத்தைந்து சூத்திரங்களைக் கொண்ட இந்நூல், பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என்று மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர் என்றும், இந்நூலின் உதாரணச் செய்யுள்களையும் இவரே இயற்றினார் என்றும் கூறுவர். சொற்சிறப்பும் பொருட் செறிவும் பொருந்திய வெண்பாக்கள் பல இந்நூலில் பொதிந்துள்ளன.

'ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத் திருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது

தன்னே ரிலாத தமிழ்'

என்னும் உதாரண வெண்பா தமிழின் தனிப்பெருமையினை உணர்த்தி நிற்கிறது.

காவிரி நாட்டு அண்ணல் அநபாயனைச் சிறப்பித்துப் பாடல்களிலே சில தொடர்கள் வருவதனால், குலோத்துங்க சோழன் காலமான பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவர் வாழ்ந்தவராயிருத்தல் கூடும்.

நிகண்டுகள்

சொற்களின் பொருள்களை விளக்கும் நூல்களுக்கு நிகண்டு என்பது பெயர். தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் உரியியல் இத் தன்மையதே. நிகண்டுகள் செய்யுள் வடிவிலும் நூற்பா வடிவிலும் யாவரும் எளிதில் மனப்பாடஞ் செய்யும்வண்ணம் இயற்றப்பட்டனவாகும். அக்காலத்தே அவை தமிழ்மொழி வளர்ச்சிக்குத் துணைபுரிந்தன. ஆங்கிலேயரின் சார்பால் தமிழில் பல அகராதிகள் வெளிவரத் தொடங்கிய பின்னர், நிகண்டின் பயிற்சி