பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

தமிழ் இலக்கிய வரலாறு


கள் என்பதை இலக்கியம் வாயிலாக அறிகிறோம். சங்க காலத்தில் காணும் ஒளவையார் வேறு: இடைக் காலத்தில் வாழ்ந்த ஒளவையார் வேறு என்று கொள்வதே பொருந்தும். சிறுவர்களுக்கென்று நல்வழி பாடிய ஒளவையார் நாயன்மார்களையும் நம்மாழ்வாரையும் குறிப்பிடுகின்றார்; எனவே, அவர்கள் வாழ்ந்த காலத்திற்கும் பிற்பட்டு ஓர் ஒளவையார் வாழ்ந்தார் என்ற முடிவுக்கு வருகிறோம். அவர் பத்துப் பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம். நல்லிசைப் புலமை மெல்லியராகிய இவரைச் சோழநாட்டில் பாணர் குடியில் பிறந்தவர் என்று குறிப்பர். தமிழ் நாவலர் சரிதையும் இவரைக் குறித்துப் பல்வேறு நிகழ்ச்சிகளைக் கூறுகின்றது.

ஒளவையார் பாடிய நூல்கள்

ஆத்திசூடி என்னும் நூலை இளைஞர்கள் எளிதில் கற்று மனத்தில் இருந்தும் வண்ணம் இவர் எளிய முறையில் சிறு சிறு சொற்றொடர்கள் கொண்டு அமைத்துள்ளார். காப்புச் செய்யுளைத் தவிர்த்து, 109 பாக்கள் உள்ள இந் நூலில், கடவுள் வாழ்த்தில் 'ஆத்தி சூடி' என்னும் முதற் குறிப்பு உள்ளது. எனவே நூலின் பெயரும் அதுவாக அமைந்தது. ஆத்தி சூடியை நோக்கச் சிறிது நீண்ட சொற்றொடரால் ஆன நூல் 'கொன்றை வேந்தன்' என்பது படிப்படியாக மன வளர்ச்சி பெற்று மாணவர்கள் கற்கும் முறையில் இந் நூல் அமைந்திருப்பது, ஆசிரியர் மற்றவர் உள்ளம் உணரும் பான்மையினைப் புலப்படுத்தும். 'மூதுரை' என்னும் நூலுக்கு 'வாக்குண்டாம்' என்னும் பெயரும் உண்டு. ‘வாக்குண்டாம்’ என்று கடவுள் வணக்கப் பாடல் தொடங்குவதால் இப்பெயர் ஏற்பட்டது. இதில் காணும் செய்யுள்கள் எளிமையும் இனிமையும் உடையன. நூலின் முப்பது செய்யுள்களிலும் பழைய இலக்கியங்களில் காணும் அரிய கருத்துகளையும் நீதிகளையும் காணலாம். மக்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல வழிகளைக் கூறும் நல்வழி' எனும் நூலையும் இவர் இயற்றியுள்ளார். சமயக் கருத்து