பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

தமிழ் இலக்கிய வரலாறு


பாடுதலால், இந்நூல் பரணி என வழங்கப்பட்டது என்றும் சிலர் கூறுவர். அணி, மணி முதலிய அரிய பொருள்களை வைத்துக் காக்கும் பரணி செப்புப்பரணி என அழைக்கப்படுதல் போல, பல்வகைக் கற்பனை நயமும் பல்வகைச் சுவைகளும் விரவி வருவதனால் இந்நூல் பரணியென வழங்கப்பட்டது என்பர் சிலர். ஆயினும், பரணி நட்சத்திரத்திற் பிறந்தானைப் பாடுவது காரணமாக இந்நூல் பரணி என வழங்கப்படுகிறது என்னும் கருத்துப் பொருத்தமுடைத்தாகும். பரணி நாளில் வெற்றி நல்கும் காடுகெழு செல்வியான கொற்றவைக்குக் கூழாக்கிச் சமைத்து இட்டு, கூத்தியற்றி, நின்று ஆடி வழிபாடு நிகழ்த்துவது காரணமாகப் பரணி என்று பெயர் வந்தது என்பர் அறிஞர் பலர்.

பரணியின் இலக்கணம்

'வஞ்சி மலைந்த உழிஞை முற்றித்
தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை
வெம்புசின மாற்றான் தானைவெங் களத்தில்
குருதிப் பேராறு பெருகுஞ் செங்களத்து

ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே '

என்று பன்னிரு பாட்டியலும்,

'மூண்ட அமர்க்களத்து மூரிக் களிறட்ட
ஆண்டகை யைப்பாணி யாய்ந்துரைக்க - ஈண்டிய
நேரடியா யாதியா நீண்டகலித் தாழிசை

ஈரடிகொண் டாதியுட னீறு'

என்று வெண்பாப் பாட்டியலும்,

'ஆனை யாயிரம் அமரிடை வென்ற

மான வனுக்கு வகுப்பது பரணி'