பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலம்

161


என்று இலக்கணவிளக்கப் பாட்டியலும் கூறுவதனைக் காணலாம். மேலும், காலத்தால் முற்பட்ட பன்னிரு பாட்டியலில்,

'ஏழ் தலைப் பெய்த நூறுடை இபமே

 அடுகளத் தட்டாற் பாடுதல் கடனே'

என்று குறிப்பிடுவதால், போர்க்களத்தில் எழுநூறு யானைகளைக் கொன்றவனுக்குப் பரணி பாடப்படும் என்ற கருத்து விளங்குகிறது. பிற்காலத்தில் மன்னன் ஒருவன் பரணிப் பாடலைப் புலவர் வாய்வழிப் பெறுதற்கு ஆயிரம் யானைகளை அமர்க்களத்தில் கொன்றிருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதெனலாம்.

அமைப்பு

கடவுள் வாழ்த்து, கடை திறப்பு, பாலைகூறல், கோயிற் சிறப்பு, காளியைப் போற்றல், இந்திர சாலம், மன்னன் மரபுரைத்தல், போர்ச் சிறப்புரைத்தல், போர்க்களம் காணல், கூழ் சமைத்து வார்த்தல், மன்னனை வாழ்த்தல் முதலான உறுப்புகள் பரணி இலக்கியத்தில் இடம்பெறும். சிருங்காரச் சுவையினைக் 'கடை திறப்பு'ப் பகுதியில் கண்டு மகிழலாம். பிரிந்திருக்கும்போது தம் கேள்வர் பிழைகளை நினைத்தலும், பின் கண்டபோது மறத்தலும் ஆகிய பண்பில் மேம்பட்ட கற்பின் செல்வியரை,

'பேணுங் கொழுநர் பிழைகளெலாம்
பிரிந்த பொழுது நினைந்தவரை
காணும் பொழுது மறந்திருப்பீர்

கனபொற் கபாடந் திறமினோ.'

என்று இப்பரணி குறிப்பிடுகிறது. த.-11