பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலம்

163


புலவரால் இவர், 'பரணிக்கோர் செயங்கொண்டான்' என்று புகழப்பெற்றவர். இவருடைய பரணியைக் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர், 'தென்றமிழ்த் தெய்வப் பரணி' என்று போற்றிப் புகழ்கின்றார். "சயங்கொண்டான் பாக்களனைத்தும் சுருங்கச் சொல்லலாதிய பத்தழகு முள்ளனவாய் விளங்குகின்றன. சொன்னயமும் பொருணயமும் பாடறொறுங் காணலாம். இவன்றன் பாக்கள் சந்தவின்பம் பெரிதும் பயக்கும். இழுமெனு மோசையி னொழுகுறு மருவி போல இவன்றன் செய்யுள்களெல்லாஞ் செல்லுகின்றன. குறிப்புப் பொருளும் இறைச்சிப் பொருளும் உள்ளுறை யுவமங்களும் ஆங்காங்குப் பாடல்களிற் காணப்படும். சமயோசிதமாகக் சொற்களைப் பெய்தலும், கற்பனை செய்தலும், வீரம் வெகுளி, அவலம், அச்சம், காமம் முதலிய சுவைகளும், அச்சுவைகட்கேற்ற ஓசையுடைமையும், எதுகை மோனை நியமம் பிழையாமையும், இடர்ப்பட்ட சொன்முடிவு பொருள் முடிவுகளில்லாமையும், இன்னமிவை போல்வன பிற சிறப்புகளும் அந்நூலின்கண் மிகவுமுள்ளன" என்கிறார் திரு.வி.கோ.சூ. அவர்கள்.[1]

கடவுள் வாழ்த்துச் செய்யுள்களைக் கொண்டு சயங்கொண்டார் சைவர் என்பர். முதலாம் குலோத்துங்கனது கலிங்க வெற்றியைக் கூறும் இந்நூலின் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இந்நூல் வரலாற்றாராய்ச்சிக்குப் பயன்படுவதாகும்.

பெரிய புராணம்

தேவாரம் பாடிய மூவர் உள்ளிட்ட அறுபத்து மூன்று அடியார்களுடைய வரலாற்றினை இந்நூல் கூறுகிறது. அவ்வடியார்கள் இயல்பினை ஆசிரியர்,


  1. திரு. வி. கோ சூரியநாராயண சாஸ்திரியார் தமிழ்ப்புலவர் சரித்திரம்: ப, 19 20.