பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலம்

167


இயற்கை வருணனை இவர் பாடலில் இடம் பெறுகின்றது; தென்பெண்ணை பாயும் நடுநாட்டினைப் பின் வருமாறு சிறப்பிக்கின்றார்:

'காலெல்லாந் தகட்டுவரால் கரும்பெல்லாங்

கண்பொழிதேன்

பாலெல்லாங் கதிர்ச்சாலி பரப்பெல்லாங் குலைக்கமுகு

சாலெல்லாந் தரளநிறை தடமெல்லாஞ் செங்கழுநீர்

மேலெல்லா மகிற்றூபம் விருந்தெல்லாந் திருந்துமனை'.

இவர் தேவார அடிகளை ஏற்ற இடத்தில் அமைத்துப் பாடுகிறார். 'மாசில் வீணையும்' என்ற அப்பர் பெருமானின் பாடல், பெரிய புராணத்தில்,

'வெய்யநீற் றறையது தான் வீங்கிள வேனிற்பருவந்

தைவருதண் டென்றலணை தண்கழுநீர்த் தடம்போன்று மெய்யொளிவெண் ணிலவலர்ந்து முரன்றயா ழொலியின

தாய்

ஐயர்திரு வடி நீழ லருளாகிக் குளிர்ந்ததே'

என்னும் பாடலாய் வடிவெடுத்துள்ளது.

இவருடைய பாடல்களில் இயற்கை வருணனையும் இறை மணமும் சைவமணமும் கமழுவதைக் காணலாம். பரவை நாச்சியாரைத் திருவாரூர்க் கோயிலில் கண்ட சுந்தரர், பின்வருமாறு எண்ணுகிறார்:

'கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து விற்குவளை பவள மலர் மதிபூத்த விரைக்கொடியோ அற்புதமோ சிவனருளோ அறியேனென்று அதிசயித்தார்'

தஞ்சை மாவட்டத்துக் கோட்டூர் சாசனம் கொண்டும், பிற காரணங்களாலும் சேக்கிழார் பெருமானின் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என்று துணியப்படுகிறது.