பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

தமிழ் இலக்கிய வரலாறு


ஷெல்லி. கனவு காணும் உரிமையும் அவர்களுக்குண்டு: அக் கனவு பலிப்பதும் உண்டு; கம்பர் கண்ட கோசல நாட்டைக் காண்போம் : கோசல நாட்டில்,

'வண்மை யில்லைஒர் வறுமை இன் மையால்;
திண்மை யில்லைநேர் செறுநர் இன்மையால்;
உண்மை யில்லைபொய் யுரையி லாமையால்;

ஓண்மை யில்லைபல் கேள்வி ஓங்கலால்'

என்று குறிப்பிடுகிறார்.

ஓசை நயம்

அறுபதுக்கும் மேற்பட்ட பல ஓசைகளை - சந்த நயங்களை- கம்பர் இடத்திற்கேற்பக் கையாளுகிறார். கதைப் போக்கிற்கும் பாத்திரங்களுக்கும் இயைந்த முறையில் ஒலிநயம் கெழுமிக் கவிதை அமைவது கம்பருடைய பாட்டின் சிறப்பியல்பாகும். சூர்ப்பணகை இராமன் உள்ளத்தைக் கவர வேண்டுமென்று வருகின்றாள். அவள் நடையோடு போட்டி இடுகிறது கவிஞரின் பாட்டில் இழையும் ஓசை.

'பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்

வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்.'

'எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின்மேல்' என்ற தொடரையும், 'ஆவின் கொடைச் சகரர் ஆயிரத்து நூறொழித்து' என்ற தொடரையும் கொண்டு, சிலர் கம்பன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்றும், சிலர் பன்னிரண்டாம் நூற்றாண்டென்றும் கூறுவர். ஆனால் கம்பர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் - மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்தார் என்றே அறிஞர் பலர் கருதுகின்றனர்,