பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலம்

173


ஒட்டக்கூத்தர்

செய்யுள் இயற்றும் ஆற்றலில் அக் காலத்துள்ள கவிகளுட் சிறந்து விளங்கினமையால், 'கவிராக்ஷஸ னென்றும், 'கவிச் சக்கரவர்த்தி'களென்றும், அரசனாற் காளம் என்னும் விருது பெற்றமையால் 'காளக்கவி' யென்றும், இருமொழி நூல்களுள்ளும் இன்றியமையாதனவற்றைச் செவ்வனே அறிந்து அவற்றை நன்கு புலப்படுத்திச் செய்யுள் செய்யும் திறமை வாய்ந்தமையால் 'சருவஞ்ஞ கவி' என்றும் இவர் வழங்கப்படுவர்.

இவருடைய ஊர் மலரி என்பர். 'மலரி வருங்கூத்தன்' என்ற தண்டியலங்கார மேற்கோள் செய்யுளைக் கொண்டு இவ்வாறு துணிகின்றனர். இவருடைய இயற்பெயர் கூத்தராகும். 'கூத்த முதலியார்' என்றும் வழங்குவதுண்டு. இவர் கைக்கோளர் என்னும் மரபினைச் சார்ந்தவர். இவர் பிறந்த மரபின் சிறப்பினை இவர் இயற்றிய 'ஈட்டியெழுபது' என்னும் நூலில் புகழ்ந்துரைக்கின்றார்.

இவர் விக்கிரம சோழன் மீது ஓர் உலாவும், அவன் மகனாகிய இரண்டாம் குலோத்துங்க சோழன் மீது ஓர் உலாவும், அவன் மகனான இரண்டாம் இராசராச சோழன் மீது ஓர் உலாவும் பாடியுள்ளார். இவ்வுலாக்கள் 'மூவருலா' என்று வழங்கப்படும்.

உலா- பெயர்க் காரணம்

இறைவனோ, அரசனோ, ஞானகுருவோ உலா வருவதாகப் பாடப்படும் பிரபந்தமாதலின், உலாவெனப்படும்.

உலாவின் இலக்கணம்

'ஊரோடு தோற்றமும் உரித்தென மொழிப

வழக்கொடு சிவணிய வகைமை யான'

என்ற தொல்காப்பிய நூற்பா, பிற்கால உலாப் பிரபந்தங்களுக்குத் தோற்றுவாய் செய்தது என்பர்.