பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

தமிழ் இலக்கிய வரலாறு


என்னும் வாக்கால் அறியலாம். இவரியற்றிய மூவருலாவில் சோழர்கள் குல மரபும், பாட்டுடைத் தலைவனின் பெருமையும், தலைவன் பள்ளியெழுந்து நீராடித் தன்னை ஒப்பனை செய்துகொண்டு பட்டத்து யானையில் பவனி வருதலும், உடன் வருவோரும், குழாங்களும், குழாங்களின் கூற்றும், ஏழு பருவப் பெண்டிரின் உள்ளக் கிளர்ச்சியும், அதனால் நிகழும் செயல்களும், பல்வேறு விளையாட்டுகளும் கூறப்படுகின்றன.

இவர் 'தக்கயாகப் பரணி' என்னும் பரணி நூலையும் செய்தார். மேலும் அரும்பைத் தொள்ளாயிரம், காங்கேயன் நாலாயிரக் கோவை, குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். இராமாயண உத்தர காண்டத்தை இவர் இயற்றினார் என்றும் சிலர் கருதுகின்றனர். தமிழ் இலக்கியத் துறையில் 'பிள்ளைத் தமிழ்' என்னும் துறையை வகுத்த பெருமை இவரையே சாரும். பெரியாழ்வார் இவருக்கு முன்னரே கண்ணனைக் குழந்தையாக எண்ணிப் பல்வேறு பாடல்களைப் பாடியிருப்பினும், 'பிள்ளைத்தமிழ்' என்ற பெயரிலே தனியொரு நூலினைச் செய்தவர் முதன்முதல் இவரே ஆவர். இவர் பாடிய மூவருலாவில் வரலாற்றுச் செய்திகளை நாம் அறியலாம். இவரது காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு என்பது நன்கு தெளிவாகின்றது.

புகழேந்திப் புலவர்

'கேட்டாலும் இன்பம் கிடைக்குங்கண் டீர்கொண்ட

கீர்த்தியொடு

பாட்டா லுயர்ந்த புகழேந்தி'

என்று படிக்காசுப் புலவர், புகழேந்திப் புலவரைத் தாம் இயற்றிய தொண்டை மண்டல சதகத்தில் புகழ்கிறார். "ஐயன் களந்தைப்புகழேந்தி', 'காரார் களந்தைப் புகழேந்தி' என்ற தொடர்கள் இவர் தொண்டை மண்டலத்தில் பொன்