பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

தமிழ் இலக்கிய வரலாறு


யினைத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. இந்நூலாசிரியர் மெய்கண்டார், திருவெண்ணெய் நல்லூர் வேளாளர் அச்சுத களப்பாரின் மைந்தர். சிலர், 'சிவஞான போதம் வடமொழி இரெளரவ ஆகமத்தின் பாவ விமோசனப் படலத்தில் காணப்படும் பன்னிரண்டு சூத்திரங்களின் மொழி பெயர்ப்பு', என்பதை மறுத்து, 'இது தமிழ் மொழியிலே தோன்றிய முதல் நூல், மொழி பெயர்ப்பு நூல் அன்று' என்பர் அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார்.1

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் கல்வெட்டொன்று, மெய்கண்டார் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி என்பதை அறிவிக்கிறது.

சிவஞான சித்தியார்

பரபக்கம், சுபக்கம் என்ற இரண்டு பிரிவுகள் கொண்ட விரிவான நூலான இதனை இயற்றியவர் மெய்கண்டாரின் முதன் மாணவராகிய அருள் நந்தி சிவாசாரியார் ஆவர். இது சிவஞான போதத்தின் வழி நூலாய் அமைந்துள்ளது. 'சிவத்தின் மேல் தெய்வமில்லை; சிவஞான சித்திக்கு மேல் சாத்திரமில்லை' என்று சிவபோக சாரமும், 'பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியச் சித்தியிலே ஓர் விருத்தப் பாதி போதும்' என்று சிவபோகசாரப் பாடற் பகுதியும் இதன் பெருமையினைக் குறிக்கின்றன.

இருபா இருபஃது

அருணந்தி சிவாசாரியார், தம் ஆசிரியரை வழிபட்டு வினவும் முறையிலே சில சைவ சித்தாந்த உண்மைகளை இந்நூலில் விளக்கிக் கூறியுள்ளார். அந்தாதித் தொடையில்


1. தி. வை.சதாசிவப் பண்டாரத்தார், தமிழ் இலக்கிய வரலாறு (13. 14, 15 ஆம் நூற்றாண்டுகள்) ப. 24.