பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

189


ரத்தினமாலை, திருவாய் மொழி, நூற்றந்தாதி, பிரமேய சாரம் முதலான பாட்டியல் நூல்களையும், திருவாராதனைக் கிரமம், விரோதி பரிகாரம் முதலான உரைநடை நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். மேலும், இவர் பெரியாழ்வார் திருமொழி உரை, இராமானுச நூற்றந்தாதி உரை. ஞான சார உரை தத்துவ வாக்கிய உரை என்னும் உரை நூல்களையும் இயற்றினார் என்பது தெரிகிறது. 'அழகிய மணவாள தாசர்' எனப்படும் பரத்துவ பட்டரின் மாணவர் பிள்ளைப் பெருமாளையங்கார் பிற்காலத்தவர் ஆவர்.

பதினெண் சித்தர்கள்

பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள் சித்தர்கள். இவர்கள், உலகப்பொருள்களின் உண்மை நிலைகளை விளக்கி, அவை பயனளிக்கும் ஆற்றலையும் தங்கள் நூல்களில் அறிவித்துள்ளார்கள். மருத்துவ நூல், மந்திர நூல், யோக நூல், ஞான நூல், இரசவாத நூல் முதலான பல பொருள் பற்றியும் இவர்கள் நூல் செய்துள்ளார்கள். சித்த மருத்துவம் தமிழர்க்கியைந்த மருத்துவம் ஆகும். 'பதினெண் சித்தர்கள்' என்று வழங்கப்படுவோர், அகத்தியர், புலத்தியர், புசுண்டர், நந்தி, திருமூலர், காலாங்கி நாதர், போகர், கொங்கணர், உரோமமுனி, சட்டைமுனி, மச்சமுனி, கரூரார், தன்வந்திரி, தேரையர். பிண்ணாக்கீசர், கோரக்கா, யூகி முனி, இடைக்காடர் என்பவர். சித்தர்களில் தலையாயவர் அகத்தியர். அகத்தியர் ஒருவரா பலரா என்பது ஐயத்திற்கிடமானது. ஏனெனில் பல நூல்கள் பிற்காலத்தில் அகத்தியர் பெயரோடு சார்த்தி வழங்கப்படுகின்றன. சித்தர் நூல்களில் தலைசிறந்த நூலாம் திருமந்திரத்தினை இயற்றியவர் திருமூலர் என்பதை முன்னர்க் கண்டோம். காலாங்கி நாதரின் மாணவராம் போக முனிவர், யோகம் எழுநூறு, வைத்தியம் ஏழாயிரம், நிகண்டு பதினேழாயிரம், போகர் திருமந்திரம் முதலான நூல்களைச் செய்துள்ளார். இவருடைய மாணவர்