பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

தமிழ் இலக்கிய வரலாறு


புலிப்பாணி, பழனிமலைச் சாரலில் வைகாவூரில் வாழ்ந்து சிதம்பரம் இருபத்தைந்து, சாவாத்திரட்டு நூறு, பல திரட்டு நூறு, வைத்தியம் ஐந்நூறு முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார். கொங்கணர், கொங்கணர் ஞானம், குணவா கடம், கடைக்காண்டம், திரி காண்டம் முதலிய நூல்களின் ஆசிரியராவர். சட்டைமுனி, ஞானம் நூறு, கல்பம் நூறு, வாத நிகண்டு, சடாட்சரக் கோவை முதலிய நூல்களைத் தந்துள்ளார். திராவகம் எண்ணூறு, வைத்தியம் எண்ணூறு முதலிய நூல்கள் மச்ச முனியால் இயற்றப்பட்டனவாகும். தேரையர் மாணவர் யூகிமுனி வைத்திய சிந்தாமணி என்னும் நூலை இயற்றியுள்ளார். அகத்தியர் மாணாக்கர் எனக் கருதப்படும் தேரையர் எழுதிய பல நூல்களுள் 'நோய் அணுகா விதி' என்னும் நூல் அவர் மருத்துவ சாத்திரத்தில் வல்லுநர் என்பதைக் காட்டுகிறது. தன்வந்திரி என்பவர், வைத்திய சிந்தாமணி, கலை ஞானம், தன்வந்திரி நிகண்டு என்னும் நூல்களின் ஆசிரியராய் விளங்குகிறார். தனிப் பாடல்கள் பலவற்றை இயற்றிய பாம்பாட்டிச் சித்தர், சித்திர ஆருடன் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். மனத்தின் அலைச்சலுக்குப் பேயின் அலைச்சலை ஒப்பிட்டுக் கூறியவர் அகப்பேய்ச் சித்தர் ஆவர். 'குதம்பாய்' என்று பெண்ணை விளித்துப் பாடல்கள் பாடிய சித்தர் குதம்பைச் சித்தர்.[1] இவர்கள் தவிர, தாயுமான அடிகள் பாராட்டிய - பிற்காலத்தவரான சிவவாக்கியர் என்பவர் சிவவாக்கியம் என்ற சிறந்ததோர் அறிவு நூலினைச் செய்துள்ளார்.

இவர்களுடைய பாடல்களில் ஆழ்ந்த மறைபொருள் அமைந்திருக்கும். மேற்போக்காக எளிதில் பொருள் புரிந்து கொள்ள இயலாது. ஆயினும், இவை நாட்டு மக்கள் நெஞ்சில் கவர்ச்சியூட்டி இன்றும் வாழ்கின்றன.


  1. குதம்பை.கா தண்ணி வகை. அஃது ஆகுபெயராய்ப் பெண்ணை உணர்த்தியது. 'குதம்பாய்' என்பது விளி.