பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

தமிழ் இலக்கிய வரலாறு


கல்லாடர், தெய்வச்சிலையார் என்னும் இருவரும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியிருப்பது தெரிகிறது.

அடியார்க்கு நல்லார்

இவர் 'பொப்பண்ண காங்கேயன்' என்னும் கன்னட அரசனால் ஆதரிக்கப் பெற்றவர் என்பது 'பொப்பண்ண காங்கேயர் கோனளித்த சோற்றுச் செருக்கல்லவோ தமிழ் மூன்றுரை சொல்லித்ததே' என்ற செய்யுட்பகுதியால் அறியலாம். 'நிரம்பையர் காவலர்' என்னும் பெயரும் இவருக்கு உண்டு. நிரம்பை-கொங்கு நாட்டில் உள்ள ஓர் ஊர். முத்தமிழ்க் காப்பியமாம் சிலப்பதிகாரத்திற்குச் சிறந்ததோர் உரையினை இயற்றியுள்ளார். பொருண்முடிவுக்கேற்பச் சிறிதும் பெரிதுமாகத் தொடர்களை அமைத்து உரைகூறி ஆங்காங்கு இன்றியமையா இலக்கணம் முதலியவற்றை விளக்கிச் சொல்லுதல் இவருரையின் இயல்பு. சிற்சில இடங்களில் அணிகள், மெய்ப்பாடுகள் முதலியன இவராற் குறிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் இவர் நுண்ணிதின் உணர்ந்து காட்டியிருக்கும் சொல்லமைப்புகளின் பயன் கற்றோர்க்கு இன்பம் விளைவிப்பனவாகும். [1]

இவர்தம் உரையில் காலத்தைக் கணித்தறியச் சில சோதிடக் குறிப்புகளையும் தருகிறார். சிலப்பதிகாரத்தின் பல காதைகளுக்குக் கிட்டுகின்ற இவருடைய உரையும் கிடைக்காமற் போயிருந்தால், சிலம்பின் இசை பற்றிய செய்தி சிறிதளவும் விளங்காமற் போயிருக்கும்.

பரிமேலழகர்

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் அர்ச்சகர் மரபினர் என்று இவரைக் கூறுவர். வைணவ சமயத்தினரான


  1. "சிலப்பதிகாரம் ந, மு. வே. மாட்டார் உரை. அடியார்க்குநல்லார் வரலாறு ப, 31.